
சேலத்தில் அரசுப் பேருந்து மோதி 8 பேர் பலியானதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேதனை தெரிவித்துள்ளது.
” சேலம் உத்தமசோழபுரம் அருகே சூளைமேடு பகுதியில் அரசுப் பேருந்து கட்டுப்பாட்டை இழந்து சாலையோர தடுப்பை உடைத்து, எதிர்புறம் சென்ற சிறிய ரக சரக்கு வாகனத்திலும், அவ்வழியாக இரண்டு சக்கர வாகனத்தில் சென்றவர்கள் மீதும் மோதியதில் கர்ப்பிணி பெண், கைக் குழந்தை உட்பட எட்டு பேர் பலியாகியுள்ளனர், பலர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது.” என்று இந்தக் கோர விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயற்குழு இரங்கல் தெரிவித்துள்ளது.
”அரசுப் பேருந்தில் பிரேக் பிடிக்காததால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து இந்த விபத்து நடந்துள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன. எனவே, அரசுப் பேருந்துகள் பராமரிப்புக்கும், தரமான உதிரிபாகங்கள் பொருத்தவும் உரிய கவனம் செலுத்த வேண்டும். மேலும், இந்த விபத்து குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, இதுபோன்ற விபத்துகள் இனி நடக்காமல் பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்திடவும், விபத்திற்கு காரணமாக அரசுப் பேருந்து இருந்துள்ள நிலையில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ. 25 லட்சம் இழப்பீடு வழங்கிடவும், காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களுக்கு தமிழக அரசு உயர்தர மருத்துவ சிகிச்சை அளிக்கவும் - இழப்பீடு வழங்கிடவும் வேண்டும்.” என்றும் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளார்.
விபத்து இழப்பீடு வழங்குவதற்கு தேர்தல் ஆணையம் தாமதமில்லாமல் உரிய அனுமதியை வழங்கிட வேண்டுமென்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொண்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், “ சேலம் - உத்தமசோழபுரம் 8 பேர் உயிரிழந்த செய்திகள் வருகின்றன, வருத்தத்திற்குரிய இத்தகவல் அறிந்து மிகுந்த துயருற்றேன். தமிழ்நாட்டில் அரசுப் பேருந்துகள் விபத்துக்குள்ளாவது தொடர்கதையாகி உள்ள நிலையில், இந்த ஆட்சியில் அரசுப் பேருந்துகள் முறையாக பராமரிக்கப்படவில்லை என்பதையே இந்த சம்பவம் மீண்டும் ஒரு முறை நிரூபித்திருக்கிறது.” என்று குற்றஞ்சாட்டியுள்ளார்.