+2 வில் வணிகவியல் உட்பட அனைத்து பாடப்பிரிவுகளிலும் தேர்ச்சி பெற்றவர்கள் நேரடியாக இரண்டு ஆண்டு பாலிடெக்னிக் படிப்பில் சேர்வதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தொழில்நுட்பக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மொத்தம் 492 பாலிடெக்னிக் கல்லூரிகள் உள்ளன . அதில் 55 அரசு பாலிடெக்னிக் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இக்கல்லூரிகளில் 1,43,499 டிப்ளமோ சேர்க்கைக்கான இடங்கள் உள்ளன. இந்த கல்லூரிகளில் மூன்று ஆண்டு, இரண்டு ஆண்டு (லேட்டரல் என்ட்ரி), பகுதி நேர வடிவங்கள் ஆகிய வகைகளில் டிப்ளமோ படிப்புகள் வழங்கப்படுகின்றன.
முன்னதாக பிளஸ் டூ வில் கணிதப் பாடத்தை பிரதானமாக எடுத்து படித்தவர்கள் மட்டுமே நேரடி இரண்டாம் ஆண்டு பாலிடெக்னிக் படிப்பில் சேரலாம் என்ற விதி இருந்தது. ஆனால் இப்போது தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தொழில்நுட்ப கல்வியில் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்கள் சேரும் விதியை யார் வேண்டுமானாலும் படிக்கலாம் என்பதாகத் தளர்த்தியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக பாலிடெக்னிக் கல்லூரிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. கடந்த ஆண்டு மொத்த இடங்களில் 40% மாணவர்கள் மட்டுமே பாலிடெக்னிக் படிப்பில் சேர்ந்துள்ளனர். எனவே மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையை அதிகரிக்கும் வகையில் இந்த ஒரு புதிய மாற்றத்தை கொண்டு வந்துள்ளது தொழில்நுட்பக் கல்வி துறை.
பிளஸ் டூவில் கணிதம் படிக்காத மாணவர்கள் பாலிடெக்னிக் சேரும்போது சிரமம் அடைவார்கள். ஆனால் இதை சமாளிக்க பாலிடெக்னிக் பாடத்திட்டங்களில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன இரண்டாம் ஆண்டில் கணக்கு பாடத்திற்கு பதிலாக திறன் சார்ந்த படிப்புகள் சேர்க்கப்பட்டுள்ளன. இதனால் பிற பிரிவுகளை சேர்ந்த மாணவர்களுக்கு டிப்ளமோ படிப்புகளை படிக்க இது ஒரு பிரச்சனையாக இருக்காது. பத்தாம் வகுப்பு வரை பயின்ற கணிதமே போதுமானதாக இருக்கும் எனக் கூறப்படுகிறது.
பாலிடெக்னிக் படிக்க ஆர்வம் காட்டாமல் நேரடியாக பி.இ படிக்கவே மாணவர்கள் சென்றுவிடுவதும் இதற்கு ஒரு காரணம். தமிழகத்தில் தொழில்வளர்ச்சி அதிகரித்து வரும் நிலையில் பாலிடெக்னிக் பயின்றவர்களுக்கான வேலை வாய்ப்புகளும் அதிகரிக்கின்றன. போதுமான அளவில் இதைப் பயின்ற இளைஞர்கள் கிடைக்காவிட்டால், வட இந்திய இளைஞர்களே தமிழக தொழில்துறையிலும் வேலைவாய்ப்பு பெறும் நிலை உருவாகலாம்.