பொங்கல் பரிசு தொகை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்
பொங்கல் பரிசு தொகை வழங்கும் முதல்வர் ஸ்டாலின்

அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.1000 பொங்கல் பரிசு: தொடங்கிவைத்தார் முதல்வர் !

தமிழகத்தில் அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசாக தலா ரூ.1,000 வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடங்கி வைத்தார்.

ஒவ்வோர் ஆண்டும் பொங்கல் பண்டிகையின்போது, தமிழக அரசு சார்பில் பரிசுத் தொகுப்புகள் அறிவிக்கப்படுவது வழக்கம். தி.மு.க. ஆட்சிப் பொறுப்பேற்றதுடன், 2022-ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகைக்காக 21 வகை பொருள்கள் வழங்கப்பட்டன. ரொக்கப் பணம் வழங்கவில்லை.

கடந்த ஆண்டு ஒரு கிலோ அரிசி, சர்க்கரை, கரும்புடன் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 பொங்கல் பரிசுத் தொகுப்பாக வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு சில கட்டுப்பாடுகளுடன் பொங்கல் பரிசுக்கான ரொக்கத் தொகை அறிவிப்பை தமிழக அரசு கடந்த 5-ஆம் தேதி வெளியிட்டது. ஆனால், அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் ரொக்கத் தொகை வழங்க வேண்டுமென பல்வேறு தரப்பிலிருந்தும் அரசுக்குக் கோரிக்கைகள் எழுந்தன.

இந்தக் கோரிக்கைகளை ஏற்று, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ரூ.1,000 ரொக்கத் தொகையுடன் ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சா்க்கரை, முழுநீளக் கரும்பு ஆகியன வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

அதன்படி, சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள நியாய விலைக் கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார்.

அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. டோக்கன்களின் அடிப்படையில் நாளொன்றுக்கு 150 முதல் 200 அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது.

ஜனவரி 13ஆம் தேதிக்குள் அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரா்களுக்கும் பொங்கல் பரிசுத் தொகுப்பை அளிக்க தமிழக அரசின் கூட்டுறவு மற்றும் உணவுத் துறை தீா்மானித்துள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com