சென்னை ஆலந்தூரில் பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ. 3,000 ரொக்கம் வழங்கும் பணிகளை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை தொடக்கிவைத்தார்.
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு நீளக் கரும்புடன் பொங்கல் பரிசாக ரொக்கம் ரூ. 3,000 வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.
தமிழகத்தில் மொத்தம் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகை வழங்கப்படவுள்ள நிலையில், சென்னை ஆலந்தூரில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மக்களுக்கு பொங்கல் தொகுப்பை வழங்கி பணிகளைத் தொடக்கிவைத்தார்.
இந்த நிகழ்வில் திமுக எம்.பி. டி.ஆர். பாலு, அமைச்சர்கள் பெரியகருப்பன், சக்கரபாணி, அன்பரசன், மா. சுப்பிரமணியன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அனைத்து மக்களுக்கும் பொங்கல் தொகுப்பை வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அந்தந்த நியாய விலைக் கடைகள் மூலம் மக்களுக்கு டோக்கன் விநியோகிக்கப்பட்டுள்ள நிலையில், குறிப்பிடப்பட்ட நேரத்தில் சென்று மக்கள் பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.