தமிழ்நாட்டின் மிக முக்கியமான பல்கலைக்கழகமான அண்ணா பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருப்பது விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் தமிழக அரசுக்கும் நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. தமிழக அரசின் பல்வேறு முடிவுகளுக்கு எதிராகவும், தமிழ்நாட்டின் நலனுக்கு எதிராகவும் ஆளுநர் ஆர்.என். ரவி செயல்பட்டு வருவதாக விமர்சனம் உள்ளது.
இந்த நிலையில், அண்ணா பல்கலைக்கழகத்தின் 44ஆவது பட்டமளிப்பு விழா, கல்லூரி வளாகத்தில் உள்ள விவேகனந்தர் அரங்கில் இன்று நடைபெற்றது. விழாவை ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமை தாங்கி நடத்த, அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு தலைவர் சீத்தாராம் முதன்மை விருந்தினராகப் பங்கேற்றார்.
இந்த விழாவின் மூலம் 1,14,957 மாணவர்கள் பட்டம் பெற்ற நிலையில், பட்டமளிப்பு விழாவை உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.
மேலும், இந்த பட்டமளிப்பு விழாவில் தமிழக உயர் கல்வித் துறையைச் சேர்ந்த முக்கிய அதிகாரிகளோ, அண்ணா பல்கலைக் கழக சிண்டிகேட் உறுப்பினரான எம்எல்ஏ பரந்தாமனோ கலந்துகொள்ளவில்லை. நிகழ்ச்சியில் அண்ணா பல்கலைக்கழக பேராசிரியர்கள், ஊழியர்கள் மட்டுமே கலந்து கொண்டனர்.
"முக்கிய பணிகள் காரணமாக விழாவில் உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடியால் கலந்து கொள்ள இயலவில்லை.”என துணைவேந்தர் வேல்ராஜ் பேசினாலும், இதற்குப் பின்னால் வேறு சில காரணங்களும் இருப்பதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக சேலம் பெரியார் பல்கலைக்கழக துணைவேந்தராகப் பேராசிரியர் ஜெகநாதன் பதவிக்காலத்தை உயர்கல்வி துறையின் எதிர்ப்பை மீறி ஆளுநர் பதவி நீட்டிப்பு செய்தது, ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் உயர்கல்வி குறித்து ஆளுநர் கூறிய கருத்துக்கள் உள்ளிட்ட விவகாரங்கள் காரணமாக இருக்கலாம் என்று கூறப்படுகிறது.
ஏற்கெனவே, கடந்த ஆண்டு நவம்பர் 2ஆம் தேதி நடைபெற்ற மதுரை காமராஜர் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா, கடந்த ஆண்டு ஜூன் 28ஆம் தேதி நடைபெற்ற சேலம் பெரியார் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாக்களை அமைச்சர் பொன்முடி புறக்கணித்திருந்தது குறிப்பிடத்தக்கது.