துக்ளக் விழாவில் சீமானுக்குப் பாராட்டு! எடப்பாடியாருக்கு விமர்சனம்!

S.Gurumurthy
துக்ளக் 55 ஆவது ஆண்டுவிழாவில் ஆசிரியர் குருமூர்த்தி
Published on

பொங்கல் அன்று துக்ளக் இதழின் 55 வது ஆண்டு விழாவில் உரையாற்றினார் அதன் ஆசிரியர் எஸ்.குருமூர்த்தி. அப்போது தமிழக அரசியல் பற்றி பல கருத்துகளை வெளியிட்டார். பெரியாரை எதிர்த்து கருத்துகள் கூறிவரும் சீமானைப் பாராட்டுவதாகவும் அவர் கூறினார்.

“பாஜகவும் அதிமுகவும் சேரவேண்டும் என்பதில் சந்தேகமே இல்லை. ஆனால் எடப்பாடி போன்ற தலைவர் இருக்கையில் எப்படி இந்த இணைப்பை ஏற்படுத்துவது என்று எனக்குத் தெரியவில்லை. அவரிடம் ஓர் அரசியல் தலைவருக்கு உண்டான நோக்கே இல்லை. 2021 தேர்தலில் அமித்ஷா சொன்னதன் பேரில் எடப்பாடியை நேரில் சென்று பார்த்தேன். கொஞ்சம் காம்ப்ரமைஸ் பண்ணி இருந்தால், பத்து, பனிரெண்டு சீட்டு கொடுத்திருந்தால் , திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைத்திருக்காது.

நீங்கள் வெற்றி பெறமாட்டீர்கள். ஆனால் திமுவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காது என்று நான் அவரிடம் சொன்னேன். 2006 இல் கலைஞர் நடத்தியதுபோல் மைனாரிட்டி அரசு ஸ்டாலினால் நடத்தமுடியாது என்று கூறினேன். நாங்கதான் ஜெயிக்கிறோம், நாங்க ஜெயிக்கமாட்டோம் என நீங்கதான் சொல்கிறீர்கள் என்றார் எடப்பாடி. யார் அவருக்கு ஆலோசனை கொடுகிறார்கள், புள்ளிவிவரம் கொடுக்கிறார்கள் என்று தெரியவில்லை. கையில் கிடைத்த வாய்ப்பை அவர் நழுவவிட்டுவிட்டார்.

திமுகவைத் தோற்கடிக்கவேண்டும் என்ற உறுதி எம்ஜிஆர், ஜெயலலிதாவுக்கு இருந்ததுபோல் இப்போது அதிமுக தலைமைக்கு இல்லை. அவர்களுக்கு நாங்கள் எல்லாம் பங்காளிகள், உள்ளூரில் அட்ஜஸ்ட் செய்துகொள்ளமுடியும் என்ற நம்பிக்கை உள்ளது.

பாஜக அதிமுக சேரவேண்டும் என்று நான் நினைக்கிறேன். ஆனால் பாஜக தன் நிலைமையை அதிகமாக மாற்றிக்கொண்டு அதிமுகவைக் கட்டிக்கொண்டால் பாஜகவுக்கு நட்டம்தான் வரும்.

அரசியலில் சீமான் முதன்முதலில் பெரியாரை நேரடியாக எதிர்ப்பதால் அவரைப் பாராட்டுகிறேன். பத்திரிகைத் துறையில் இதை செய்தவர் சோ. அதை அரசியலில் செய்கிறார் சீமான். அது தமிழ்நாட்டுக்கு நல்லது’ இவ்வாறு அவர் பேசினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com