சென்னை மருத்துவக் கல்லூரியில் புதிய கூட்ட அரங்கத்தை மருத்துவம்-மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் இன்று திறந்துவைத்தார்.
பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது :
"மழைக்காலம் தொடங்கவுள்ளது. டெங்கு நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை படிப்படியாக அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்தும் நோக்கில், தேவையான கொசு ஒழிப்புப் பணியாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கு தேவையான மருந்துகளும் கொடுக்கப்பட்டுள்ளது.
பொது மக்களும் இதற்கு முழு ஒத்துழைப்பு கொடுக்க வேண்டும். மலேரியா போன்று கழிவுநீரிலிருந்து பரவாமல், சுத்தமான தண்ணீரில்தான் டெங்கு பாதிப்பை ஏற்படுத்தும் கொசுக்கள் உற்பத்தியாகும். மேலும், பகல் நேரத்தில் கடிக்கும் கொசுக்கள்தான் இந்த நோயை பரப்பும் என்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும்.
காய்ச்சல், டெங்கு அறிகுறிகளான காய்ச்சல், தலைவலி, வாந்தி, தீராத உடல்வலி ஆகியவை ஏற்பட்டால் உடனடியாக இரத்தப் பரிசோதனை மேற்கொண்டு, உரிய மருத்துவ சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டும்.
டெங்கு போல பன்றிக்காய்ச்சலுக்கும் தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொண்டு வருகிறோம்.
டெங்கு காய்ச்சலால், கடந்த ஆண்டு 12 உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ள நிலையில், இந்த ஆண்டு இதுவரை 4 இழப்புகள் மட்டுமே ஏற்பட்டுள்ளன." என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.
மேலும், கடந்த ஜனவரி மாதம் 19 பேருக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்ட நிலையில், தற்போது பாதிப்பு எண்ணிக்கை 399 ஆக அதிகரித்துள்ளதால், லேசான சளி, காய்ச்சல் போன்ற அறிகுறிகள் இருந்தாலும் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என்று சுகாதாரத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.