விஜயகாந்துக்கு 15 இலட்சம் பேர் அஞ்சலி - பிரேமலதா தகவல், நன்றி!

விஜயகாந்துக்கு 15 இலட்சம் பேர் அஞ்சலி - பிரேமலதா தகவல், நன்றி!

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்துவதில் 15 இலட்சம் பேர் கலந்துகொண்டுள்ளனர் என அவரின் மனைவி பிரேமலதா தெரிவித்துள்ளார்.

சென்னையில் நேற்று காலமான விஜயகாந்தின் உடல் கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க.வின் தலைமை அலுவலகத்தில் இன்று இரவு அடக்கம் செய்யப்பட்டது. அஞ்சலி செலுத்த வந்தவர்களுக்கு நன்றி தெரிவித்து அவரின் மனைவியும் தே.மு.தி.க. பொதுச்செயலாளருமான பிரேமலதா பேசினார். அப்போது, தமிழகத்தில் இதுவரை எந்தத் தலைவருக்கும் இல்லாதபடி கடந்த இரண்டு நாள்களாக சுமார் 15 இலட்சம் பேர் விஜயகாந்துக்கு அஞ்சலி செலுத்தியுள்ளதாக புள்ளிவிவரம் கிடைத்துள்ளது என்றார்.

அஞ்சலி செலுத்துவதற்கு வசதியாக முதலமைச்சர் ஸ்டாலின் தீவுத்திடலை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும் உடனடியாக மாநகராட்சி ஆணையர் இராதாகிருஷ்ணன் உரிய ஏற்பாடுகளைச் செய்துதந்ததாகவும் குறிப்பிட்ட பிரேமலதா, உதயநிதி உட்பட்ட அமைச்சர்கள், ஓ.பன்னீர், எடப்பாடி பழனிசாமி, ஜெயக்குமார், அன்புமணி, அண்ணாமலை, மைய அமைச்சர் நிர்மலா ஆகியோருக்கும் பெயர் விடுபட்டிருந்தால் தவறாகக் கருதவேண்டாம் என அஞ்சலி செலுத்திய அனைவருக்கும் நன்றி என்றும் பிரேமலதா கூறினார்.

விஜயகாந்தின் இறுதிப்பயணம் சிறப்பாக அமைந்ததற்காக காவல்துறையினரின் பணியைப் பாராட்டியதுடன், அவர்களுக்கு ஒரு சல்யூட் என வணக்கம் வைத்தும் பிரேமலதா நன்றிகூறினார்.

தேர்தலில் வெற்றி பெறுவதே விஜயகாந்துக்கு செலுத்தும் உண்மையான அஞ்சலியாக இருக்கும் என அவர் பல முறை அழுத்தமாகக் குறிப்பிட்டார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com