தமிழகத்தில் கடந்த ஒரு மாத காலமாக அரிசி, பருப்பு, சீரகம் ஆகிய அத்தியாவசிய பொருட்களின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
தமிழகத்தில் ஒரு மூட்டை அரிசியின் விலை ரூ. 300 முதல் ரூ. 600 வரை அதிகரித்து உள்ளது. இதேபோல, ஒரு கிலோ பருப்பின் விலை ரூ.10-ம், ஒரு கிலோ சீரகத்தின் விலை ரூ. 10-ம் அதிகரித்து உள்ளன.
முன்னர், ரூ.1400க்கு விற்பனையான 26 கிலோ எடை கொண்ட பொன்னி அரிசியின் விலை, ரூ. 1800க்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும், ரூ. 900த்திற்கு விற்கப்பட்ட இட்லி அரிசியின் விலை, தற்போது ரூ. 1200க்கும், ரூ. 1500க்கு விற்கப்பட்ட பச்சரிசியின் விலை தற்போது ரூ. 1800க்கு விற்கப்படுகிறது.
இதேபோல ஒரு கிலோ துவரம்பருப்பு ரூ.132-ல் இருந்து ரூ.142ஆகவும், உளுந்து ஒரு கிலோ ரூ. 120-ல் இருந்து ரூ. 127ஆகவும், கடலைப்பருப்பு ஒரு கிலோ ரூ. 88-ல் இருந்து ரூ. 93ஆகவும், பாசிப்பருப்பு ஒரு கிலோ ரூ. 98-ல் இருந்து ரூ. 110ஆக உயர்ந்துள்ளது.
இந்த விலைகள் மொத்த வியாபாரிகளுக்கானது என்றும், சில்லறைக் கடைகளில் இந்தப் பொருட்களின் விலை ரூ. 5 முதல் ரூ.10 வரை கூடுதலாக விற்பனை செய்யவும் வாய்ப்பிருப்பதாக வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.
இதுகுறித்து, சி.பி.எம். மாநிலச் செயலாளர் பெ.சண்முகம், "அரிசி விலை ஒவ்வொரு மாதமும் வெவ்வேறாக உயர்ந்து கொண்டே இருக்கிறது. 25 கிலோ அரிசி மூட்டையின் விலை கடந்த மாதம் ரூபாய் 1800 ஆக இருந்தது.
இந்த மாதம் என்ன விலையோ, எவ்வளவு உயரப் போகிறதோ? அரிசி விலை ஆகாயத்தை நோக்கிப் பறக்கிறது என்பது மட்டும் உறுதி. ஆனால் ஆட்சியாளர்களின் காதுகளுக்கு இந்த விஷயம் எட்டவில்லை போலும்!" என்று தனது சமூக ஊடகப் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.