தமிழகம் வரும் பிரதமர் மோடி - விவசாயிகளுக்கான ரூ.18,000 கோடி நிதி விடுவிப்பு!

பிரதமர் மோடி
பிரதமர் மோடி
Published on

தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று கோவை வருகிறார். அப்போது அவர் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்கவுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று தமிழ்நாடு மற்றும் ஆந்திரப்பிரதேசம் மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்கிறார். காலை ஆந்திராவில் நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு, மதியம் 1 மணியளவில் மோடி கோவை வருகிறார்.

அவருக்கு கோவை விமான நிலையத்தில் பாஜகவினர் பிரமாண்ட வரவேற்பளிக்க திட்டமிட்டுள்ளனர். மதியம் 1.30 மணியளவில் கோவை கொடிசியா அரங்கில் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.

அப்போது 9 கோடி விவசாயிகளுக்கு பயனளிக்கும், பிரதமரின் விவசாயிகள் கௌரவிப்பு நிதி திட்டத்தின் 21-வது தவணையாக ரூ.18,000 கோடியை விடுவிக்கிறார்.

நீடித்த, சுற்றுச்சூழலுக்கேற்ற, ரசயானம் இல்லாத வேளாண் நடைமுறைகளை பின்பற்றுவதை ஊக்கப்படுத்துவதையும், இந்தியாவின் வேளாண் எதிர்காலத்திற்காக சாத்தியமிக்க, பருவநிலைக்கு உகந்த பொருளாதார அளவில் நீடித்த மாதிரியாக இயற்கை மற்றும் மீள்உருவாக்கம் செய்யப்படும் வேளாண்மையை முன்னிறுத்தி இந்த மாநாடு நடத்தப்படுகிறது.

இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, கேரளா, தெலங்கானா, கர்நாடகா மற்றும் ஆந்திர பிரதேச மாநிலங்களைச் சேர்ந்த விவசாயிகள், விவசாய தொழில் முனைவோர், விஞ்ஞானிகள், தன்னார்வலர்கள் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்தப் பயணத்தின்போது மோடி, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து உரையாட திட்டமிட்டுள்ளார்.

மோடியுடன் இணைந்து, எடப்பாடி பழனிசாமியும் தென்னிந்திய இயற்கை வேளாண் மாநாட்டில் கலந்து கொள்வார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மதியம் 3.30 மணியளவில் அவர் டெல்லி திரும்பவுள்ளார்.

பிரதமரின் வருகையை முன்னிட்டு கோவையில் உச்சகட்ட பாதுகாப்பு நிலவுகிறது. போக்குவரத்திலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

logo
Andhimazhai
www.andhimazhai.com