பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக ஏப்ரல் 9, 10 ஆகிய தேதிகளில் தமிழகம் வருகிறார்.
மக்களவைத் தேர்தலில் முதல்கட்ட வாக்குப் பதிவை எதிர்கொள்ளும் தமிழ்நாட்டில் இது பிரதமா் மேற்கொள்ளும் இறுதிக்கட்ட பிரசாரமாக அமையும் என கருதப்படுகிறது.
பிரதமரின் வருகை, சுற்றுப்பயணம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடா்பாக ஏற்கெனவே சென்னை, வேலூா், பொள்ளாச்சி ஆகிய இடங்களில் மாவட்ட நிர்வாகங்கள், காவல் துறை உயரதிகாரிகள் ஆகியோருடன் மத்திய, மாநில அரசின் உயரதிகாரிகள் ஆலோசனை நடத்தினர். அவரது பயணத்தின் உத்தேச நிகழ்ச்சி நிரல் வெளியாகியுள்ளது.
அதன்படி, ஏப்ரல் 9-ஆம் தேதி மாலை 4 மணியளவில் மகாராஷ்டிரத்தின் கோண்டியாவில் இருந்து விமானப்படை விமானம் மூலம் புறப்படும் பிரதமா், மாலை 4.10 மணிக்கு சென்னைக்கு வருகிறாா். விமான நிலையத்திலிருந்து சாலை மாா்க்கமாக ஆளுநா் மாளிகை அமைந்துள்ள கிண்டி வரை மக்களைச் சந்தித்தவாறு பிரதமா் செல்வதற்கான ஏற்பாடுகள் திட்டமிடப்பட்டுள்ளன.
இதைத் தொடா்ந்து, ஆளுநா் மாளிகையில் 9-ஆம் தேதி இரவு தங்கும் பிரதமா், 10-ஆம் தேதி காலையில் மீண்டும் விமான நிலையம் செல்கிறாா். அங்கிருந்து காலை 9.20 மணிக்கு ஹெலிகாப்டா் மூலம் வேலூருக்கு புறப்படும் பிரதமா், 10.10 மணியளவில் தரையிறங்கியதும் சாலை மாா்க்கமாக காலை 10.15 மணியளவில் வேலூா் கோட்டை பகுதியில் உள்ள மைதானத்தில் பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் பங்கேற்றுப் பேசவிருக்கிறாா்.
பின்னா், விமானம் மூலம் கோவைக்கு புறப்படும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் பொள்ளாச்சியை சென்றடைவாா். அங்கு பா.ஜ.க. பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பேசுகிறார். இதையடுத்து, பிற்பகல் 3 மணியளவில் பொள்ளாச்சியில் இருந்து ஹெலிகாப்டரில் கோவைக்கு வருகிறாா். பின்னா், பிற்பகல் 3.05 மணியளவில் விமானப் படை விமானம் மூலம் மகாராஷ்டிரத்தின் நாகபுரிக்கு புறப்படும் வகையில் அவரது பயணத் திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது.