இந்த வெயிலில் சிறப்பு வகுப்புகளா...? பள்ளிக் கல்வித்துறைக்கு எச்சரிக்கை!

இந்த வெயிலில் சிறப்பு வகுப்புகளா...? பள்ளிக் கல்வித்துறைக்கு எச்சரிக்கை!

வெயிலின் தாக்கத்தைப் பொருட்படுத்தாமல் பள்ளிகளில் நடத்தப்படும் சிறப்பு வகுப்புகளை பள்ளிக்கல்வித்துறை தடுத்து நிறுத்த வேண்டும் என மனிதநேய மக்கள் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாணவர்களும் ஆசிரியர்களும் கல்வி கடுமையிலிருந்து விடுபட்டு ஓய்வு பெறுவதற்காகவும் கடும் வெப்பத்திலிருந்து மாணவர்களைக் காப்பதற்காகவும் கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் தற்போது பரவலாக 105 பட்டத்துக்கு மேல் வெப்பநிலை இருந்து வருகிறது. முதியவர்களும் பொதுமக்களும் நோயாளிகளும் இந்த வெப்ப அலையை எதிர்கொள்ள முடியாமல் தவித்து வருகின்றனர்.

இத்தகைய சூழ்நிலையில் சில தனியார்ப் பள்ளிகள் கோடை விடுமுறைக் காலங்களில் பத்தாம் வகுப்பு 12ஆம் வகுப்பு செல்லும் மாணவர்களுக்குச் சிறப்பு வகுப்புகள் நடத்த இருப்பதாகத் தகவல்கள் வருகின்றன.

சீருடை இல்லாமல் மாற்று உடையில் மாணவர்களை அழைத்து தனியாகச் சிறப்பு வகுப்புகளை நடத்துவதாகத் தமிழகத்தின் பல்வேறு பகுதியிலிருந்து பெற்றோர்கள் புகார் அளித்த வண்ணம் இருக்கிறார்கள். இது மாணவர்களின் மீது உளவியல் சார்ந்த மன அழுத்தத்தை உருவாக்கும்.

கூடுதல் மதிப்பெண்களைப் பெறுவதற்காகக் குறுக்கு வழியில் தனியார்ப் பள்ளிகள் இது போன்ற செயல்களில் ஈடுபடுவதை ஒருகாலும் அனுமதிக்க முடியாது.

எனவே பள்ளிக்கல்வித்துறை உடனடியாக இது விடயத்தில் தலையிட்டுச் சிறப்பு வகுப்புகள் நடத்தாமல் தமிழக மாணவர்களைப் பாதுகாக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.” என்று ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com