சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்கும் முயற்சியை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து அக்கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:
"சென்னை விமான நிலையத்தை நிர்வகித்து வரும் இந்திய விமான நிலைய ஆணையத்தின் இடத்தில் வேறு ஒரு இயக்குநரை நியமிக்க வேண்டும் என்று முதலமைச்சர் பிரதமருக்குக் கடிதம் எழுதியிருப்பது, சென்னை விமான நிலையத்தைத் தனியார்மயமாக்கும் முயற்சியாகும். இந்த நடவடிக்கையை இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.
சென்னை விமான நிலையம் ஒரு சாதாரண வணிக நிறுவனம் அல்ல. அது தனிநபர் சொத்தல்ல, மக்களின் பொதுச்சொத்தாகும். நாட்டின் முக்கியமான பொது உள்கட்டமைப்பாகும். தமிழ்நாட்டின் தொழில், வர்த்தகம், சுற்றுலா, சரக்கு போக்குவரத்தின் முக்கியமான பங்களிப்பை அது செலுத்துகிறது.
சென்னை விமான நிலையத்தில் நிர்வாகக் குறைபாடுகள் இருந்தால் அவற்றைச் சரிசெய்ய வேண்டும். பயணிகள் சேவை, விமான இயக்கம், சரக்கு கையாளுதல், சாலை இணைப்பு முதலியவற்றை மேம்படுத்த வேண்டும். அதைவிடுத்து, விமான நிலையத்தைத் தனியார்மயமாக்குதல் அதற்குத் தீர்வல்ல. பொதுச்சொத்தை தனியார் லாபத்திற்காக ஒப்படைப்பது வளர்ச்சி அல்ல.
எனவே, தமிழ்நாடு அரசு பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தைத் திரும்பப் பெற வேண்டும்.
சென்னை விமான நிலையத்தை இந்திய விமான நிலைய ஆணையத்தின் பொதுத்துறை நிர்வாகத்தின் கீழேயே நவீனப்படுத்தி விரிவுபடுத்த வேண்டும். இதன் மூலமே இட ஒதுக்கீட்டுடன் கூடிய வேலைவாய்ப்புகளையும், சமூக நீதியையும் காக்க முடியும்." என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.