
சென்னையில் இன்று (ஜனவரி 8) 14ஆவது நாளாக போராட்டத்தில் ஈடுபட்ட இடைநிலை ஆசிரியர்களை காவல்துறையினர் குண்டுக்கட்டாக கைது செய்துள்ளனர்.
“சம வேலைக்கு சம ஊதியம்” வழங்க வலியுறுத்தி தமிழக அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள் கடந்த டிசம்பர் 26-ஆம் தேதி முதல் சென்னையில் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தப் போராட்டம் ஜனவரி 8-ஆம் தேதி வரை நீடித்து வரும் நிலையில், ஆசிரியர்களின் தொடர் போராட்டத்தால் கல்விப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
அரையாண்டுத் தேர்வு விடுமுறை முடிவடைந்த பிறகும் பள்ளிகள் திறக்கப்பட்ட நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்கள் பணிக்கு திரும்பாததால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டுள்ளது. போராட்டத்தில் ஈடுபட்டுள்ள ஆசிரியர்களுடன் அரசு தரப்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட போதிலும், உடன்பாடு எட்டப்படவில்லை.
இந்நிலையில், தொடக்கக் கல்வித் துறை அதிரடி நடவடிக்கையாக, பணிக்கு வராமல் போராட்டத்தில் ஈடுபடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு இனி சம்பளம் வழங்கப்பட மாட்டாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளது. “No work, No pay” கொள்கையின் அடிப்படையில் சம்பளப் பிடித்தம் செய்யப்படும் என்று நேற்று பள்ளிக் கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
இந்நிலையில், எழும்பூரில் இன்று 14 ஆவது நாளாக இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் இன்றும் நீடித்த நிலையில் போலீசார் ஆசிரியர்களை குண்டுக்கட்டாக கைது செய்துள்ளதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.