சிறுவன் மர்ம மரணம்... போராடிய குடும்பத்தினர் மீதே வழக்கா?- உதயநிதி கண்டனம்

Udhayanidhi stalin
உதயநிதி ஸ்டாலின்
Published on

மதுரையில் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுவனின் மரணத்துக்கு நீதி கேட்டு போராடிய அவருடைய குடும்பத்தார் மீதே வழக்குப்பதிவு செய்துள்ளது கண்டிக்கத்தக்கது என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

வீட்டைவிட்டு வெளியே சென்ற மதுரை ஆனையூர் கூடல்புதூர் பகுதியைச் சேர்ந்த பிளஸ் - 1 மாணவர் தமிழ்ச்செல்வன், ஒரு கண்மாயில் பிணமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து கூடல்புதூர் போலீசார், சந்தேக மரணம் என்று வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

மாணவரின் இறப்பு சம்பவத்தை கொலை வழக்காக பதிவு செய்ய வேண்டும் என்றும், சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்றும் மாணவரின் குடும்பத்தினர், உறவினர்கள், மாணவர் சங்கங்கள் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், எதிர்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

"பெற்ற பிள்ளையை இழந்து நீதி கேட்டு போராடினால், வழக்கு போடுவதும், மாற்றுத்திறனாளி என்றும் பாராமல் அவரது உறவினரை விசாரணைக்கு வர சொல்லுவதும் எந்த வகையிலும் ஏற்க முடியாதது. மாணவன் மறைந்து 12 நாட்கள் ஆகியும், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதற்குப் பதிலாக போராட்டத்தை ஒடுக்குவதிலும் - வழக்குப் பதிவு செய்வதிலும் தான் காவல்துறை குறியாக இருக்கிறது.” என்று கூறியுள்ளார்.

”இந்தப் பிரச்சினையில் முதலமைச்சர் தலையிட்டு, மாணவன் மரணத்தில் நடந்தது என்ன? அவர் கொலை செய்யப்பட்டாரா? அதற்கு காரணம் யார்? என்பதை எல்லாம் எந்த குறுக்கீடும் இல்லாமல் விசாரணை செய்ய உத்தரவிட வேண்டும்.

குறிப்பாக சி.பி.சி.ஐ.டி விசாரணைக்கு உத்தரவிட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் அவர்களை கைது செய்து உரிய தண்டனையை பெற்றுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மரணமடைந்த மாணவனின் குடும்பத்தார் மீது போடப்பட்ட வழக்கை திரும்பப்பெற்று, அவர்களுக்கான நீதி கிடைக்க வழிவகை செய்ய வேண்டும்." என்றும் உதயநிதி கூறியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com