அருந்ததியருக்கான உள் ஒதுக்கீட்டை ரத்துசெய்யக் கோரி புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தலைமையில் சென்னையில் நேற்று அக்கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆளுநர் மாளிகையை நோக்கிப் பேரணியாகச் செல்வதற்காக, எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கம் முன்பாகத் திரண்டனர். ஆனால் உரிய அனுமதியை அவர்கள் பெறவில்லை. தடையை மீறி ஊர்வலமாகச் செல்லமுயன்ற புதிய தமிழகம் கட்சியினரை காவல்துறையினர் தடுத்தனர்.
அப்போது, கிருஷ்ணசாமி, வி.கே.அய்யர் முதலிய கட்சியின் நிர்வாகிகள் சாலையில் படுத்துப் புரண்டு காவல்துறையினருடன் மல்லுக்கட்டினர். பின்னர் அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அதைத் தொடர்ந்து, இன்று மதியம் கிருஷ்ணசாமி, வி.கே. அய்யர் ஆகியோர் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், ஆளுநர் இரவியைச் சந்தித்தனர். அவரிடம் ஆறு கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் அளித்தனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணசாமி, அருந்ததியர் உள் ஒதுக்கீட்டை ரத்துசெய்ய அரசுக்கு அறிவுறுத்துவது, மாஞ்சோலை தோட்டத் தொழிலாளர்களுக்கான வீட்டு நில உரிமை, தென்மாவட்டங்களில் தேவேந்திர இளைஞர்கள் மீதான சாதியத் தாக்குதல்களுக்கு நடவடிக்கை ஆகிய மூன்று கோரிக்கைகளை முக்கியமாகப் பேசியதாகக் குறிப்பிட்டார்.