பசுமை பூங்காவாகிறது கிண்டி ரேஸ் கிளப் செயல்பட்டு வந்த இடம்: அரசாணை வெளியிட்ட தமிழக அரசு!

Madras Race Club
கிண்டி ரேஸ்கிளப்
Published on

சென்னை கிண்டி ரேஸ் கிளப் செயல்படு வந்த இடத்தில் 118 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட பசுமை அமைக்க தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:

“சென்னை, கிண்டி ரேஸ் கிளப் நிறுவனத்துக்கு வெங்கடாபுரம், அடையாறு மற்றும் வேளச்சேரி ஆகிய இடங்களில் 160.86 ஏக்கர் நிலம் கடந்த 1945 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் 99 ஆண்டுக்கு குத்தகைக்கு வழங்கப்பட்டது. இந்த நிலம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு தேவைப்படுவதால், தமிழக அரசு குத்தகையை ரத்து செய்து, நிலத்தை திரும்பப் பெற்று, மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களின் இதர பயன்பாட்டுக்கு உருவாக்கம் செய்யப்படவுள்ளது.

எனவே, கிண்டியில் நிலக் குத்தகை ரத்து செய்யப்பட்டு அரசு சுவாதீனம் செய்யப்பட்ட நிலத்தில், பொதுமக்கள் பயன்பாட்டிற்காக மிகச் சிறந்த பூங்கா, பசுமைவெளி மற்றும் பொதுமக்களுக்கு தேவையான வசதிகள் அமைப்பதற்காக, அரசுப் புறம்போக்கு என்னும் வகைப்பாட்டில் இருக்கும் ரூ.4832 கோடி மதிப்பிலான 118 ஏக்கர் நிலத்தைத் தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறைக்கு நிலமாற்றம் செய்து உத்தரவிடப்பட்டுள்ளது.

சென்னை மாநகரம் 2011 மக்கள்தொகைக் கணக்கெடுப்பின்படி, 86.9 லட்சம் மக்கள்தொகை கொண்டதாகவும், சென்னையில் ஒரு தனி மனிதருக்கான பசுமை நிலப்பகுதி 1.03 சதுர மீட்டராகவும் உள்ளது. மேலும் சென்னைப் பெருநகரின் பசுமை வெளியானது, வனப்பகுதி, பூங்காக்கள், விளையாட்டுத் திடல்கள், திறந்த வெளித்திடல்கள் என அனைத்தும் சேர்ந்து ஒட்டுமொத்தமாக சென்னையின் பரப்பில் வெறும் 6.7 சதவீதமாகத் தான் உள்ளது.

இது பிற இந்திய மாநகரங்களை ஒப்பிடுகையில் மிகவும் குறைவானதாகும். ஆகவே, சென்னையின் பசுமைப் பகுதியை அதிகரிக்க வேண்டிய தேவையின் அடிப்படையிலும், மக்கள் தொகை பெருகி வருவதை கருத்தில் கொண்டு, பூங்காக்கள் மற்றும் பசுமைவெளிகளை உருவாக்க வேண்டியது அத்தியாவசியம் ஆகியுள்ளது. ஆகவே, இதுவரை பூங்காக்கள் அமைக்கப்படாத இடங்களில் புதிய பூங்காக்களை உருவாக்க வேண்டியுள்ளது.

பூங்காக்கள் மக்களின் உடல், மன நல ஆரோக்கியத்துக்கு குறிப்பிடத்தக்க அளவில் பங்களிக்கின்றன. மனஅழுத்தம், மனச்சோர்வு, பதற்றம் ஆகியவற்றைக் குறைத்து மனதுக்கு அமைதியை பூங்காக்கள் தருகின்றன. சிறார்கள் ஓடியாடி விளையாடுவதற்குப் போதுமான இட வசதியை அளிக்கும். நகரத்தின் வெப்பமான சூழலைத் தணிக்கும் மற்றும் வெள்ளப் பாதிப்பினை குறைக்கும். மாநகரத்தின் மக்கள்தொகைப் பெருக்கத்துக்கு ஈடுகொடுத்திடும் வகையில் மிகச் சிறந்த சுற்றுச்சூழல் பூங்கா ஒன்றினை சென்னையின் மத்திய பகுதியான கிண்டியில் நிறுவுதல் மிக அவசியமானது. இங்கு அமைக்கப்படவுள்ள பூங்காவானது, மக்களது மன மகிழ்ச்சிக்கும், அமைதிக்கும், ஓய்வுக்கும் ஒட்டுமொத்த வாழ்க்கைத் தரத்தை மெருகேற்றுவதற்கும் வழிவகுக்கும்.

முதல்வராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்ற பின், சென்னையில் சுற்றுச்சூழலை பேணும் வகையில், தனியார் அமைப்புகளிடம் இருந்த அரசு நிலங்களை மீட்டு தோட்டக்கலைத் துறையின் மூலம் சென்னை, கதீட்ரல் சாலையில் கலைஞர் நூற்றாண்டு பூங்காவும், நீலகிரி மாவட்டம், ஊட்டியில் ஒரு பூங்காவும் உருவாக்கப்பட்டு வருகிறது. அதேபோல், தற்போது சென்னை, கிண்டியில் மிகப் பெரிய பரப்பளவில் உருவாக்கப்பட உள்ள இந்த பூங்கா, பொதுமக்களுக்கும் சுற்றுச்சூழலுக்கும் உகந்ததாக அமையும்.” இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com