7 மணிநேரம் காத்திருந்தும் விஜய்யைச் சந்திக்க முடியல- மறியலில் இறங்கிய மக்கள்!

CM Vijay at Pudukkottai
புதுக்கோட்டையில் முதல்வர் விஜய்
Published on: 

புதுக்கோட்டையில் நவீன வசதிகளுடன் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தை முதலமைச்சர் விஜய் இன்று திறந்துவைத்தார்.

முன்னதாக, சென்னையிலிருந்து தனி விமானத்தில் அவர் திருச்சிக்குச் சென்றார். பின்னர், அங்கிருந்து புதுக்கோட்டை வரை சாலைவலம் மேற்கொண்டார்.

தொடர்ந்து, ரூ. 24.5 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய பேருந்து நிலையத்தையும், ரூ. 8 கோடியில் மாவட்ட விளையாட்டு அரங்கத்திற்குள் கட்டப்பட்ட நவீன உள்விளையாட்டு அரங்கத்தையும் திறந்து வைத்தார்.

மேலும், ரூ.11.72 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.பின்னர், 104 பயனாளர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், வங்கிக் கடன் உதவிகள், டிராக்டர்கள், வேளாண் கருவிகளை முதலமைச்சர் விஜய் வழங்கினார்.

நிகழ்ச்சிகளை முடித்துகொண்டு திரும்பியபோது, சாலைகளின் இருபுறங்களிலும் இருந்த மக்கள் முதலமைச்சர் விஜய்யிடம் மனுக்களைக் கொடுக்க முற்பட்டனர். அவர்களைக் காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் அப்பகுதியில் சலசலப்பு ஏற்பட்டது.

இதில், கிழக்கு திருச்சியில் உள்ள செம்பட்டு பகுதியில் உள்ள மக்கள், காலை முதல் 7 மணி நேரமாக முதலமைச்சர் வருகைக்காகக் காத்திருந்தும், மனுக்களைக் கொடுக்க அனுமதிக்கவில்லை என்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram