கவின் வழக்கில் தீர்ப்பு தவறு : பியுசிஎல் அறிக்கை

கவின் வழக்கில் தீர்ப்பு தவறு : பியுசிஎல் அறிக்கை
Published on: 

கவின் செல்வகுமார் ஆணவக் கொலை வழக்கில் முதன்மை குற்றம் சாட்டப்பட்ட சுர்ஜித்தின் தந்தை சரவணன், தாய் கிருஷ்ணவேணி ஆகியோரை குற்றப் பத்திரிக்கையிலிருந்து நீக்கம் செய்து ஆணை பிறப்பித் திருக்கிறார் நீதிபதி ஆர். விஜயகுமார்; இந்த நீக்கத்தின் மீது தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) தன் ஆழ்ந்த கவலையைத் தெரிவித்துள்ளது.

” குற்றப் பத்திரிக்கையை பார்த்த அளவில் குற்றம் சாட்டப் பட்டவர்களின் மீது குற்ற முகாந்திரம் இருக்கிறதா இல்லையா? என்பதை காண்பதே பிஎன்எஸ்எஸ் பிரிவு 528-ன் முதன்மை நோக்கமாகும். சாட்சியங்களை ஆழமாக உரசிப் பார்த்து முடிவுக்கு வருதல் என்பது விசாரணை நீதிமன்றத்தின் சட்டத்தின் பாற்பட்ட கடமைப் பணியாகும். இதை உயர் நீதிமன்றம் செய்திருப்பது விசாரணை நீதிமன்றத்தின் அதிகாரத்தின் மீது கையேற்றம் செய்வதாகும்! இதையும் செய்துவிட்டு, விசாரணை நீதிமன்றம் விசாரணையின் போது, இவர்கள் இருவர் மீதும் மேலும் புது சாட்சியங்கள் கிடைத்தால், மீண்டும் அவர்களை சேர்ப்பதற்கான அதிகாரம் விசாரணை நீதிமன்றத்துக்கு உண்டு என உயர் நீதிமன்றம் சொல்லி இருப்பது "தும்பை விட்டு வாலை பிடிப்பதற்கு" ஒப்பாகும்! "சிபிஐ எதிர் ஆரியன் சிங், (2023) 18 SCC 399 வழக்கில், உயர் நீதிமன்றம் தனது உள்ளார்ந்த அதிகார வரம்பைப் பயன்படுத்தும் போது, அரசுத் தரப்பு வழக்கின் தகுதிகளை ஆராயவோ அல்லது சிறிய அளவிலான விசாரணையை (mini-trial) நடத்தவோ முடியாது என்பதை உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தியது என்பதை நினைவு கூர்வது பொருத்தமாகும்.

குற்ற நிகழ்வு நடந்த 16 மணி துளிகளுக்குள் சரவணன் குற்ற நிகழ்வு இடத்துக்கு சென்றார் என்பதும் அதன் பிறகு தொடர்புடைய காவல் நிலைய காவலரிடம் தன் மகன் சுர்ஜித் தான் கொலை செய்தார் என்று குற்றப்பத்திரிக்கையில் குறிப்பிடப்பட்ட ஒரு கண்ணியை மட்டும் சரவணன் விடுவிப்புக்கு ஏதுவாக எடுத்துக் கொண்டிருப்பது, கண்ணுற்ற சாட்சியம் இல்லாத போது, சூழ்நிலை சாட்சியத்தின் முழு சங்கிலி கண்ணிகளையும் இணைத்துப் பார்த்து முடிவுக்கு வரவேண்டும் என்ற குற்றவியல் சட்ட இயலின் அடிப்படைக்கு எதிரானதாகும். மேலும், சரவணன் மற்றும் கிருஷ்ணவேணி இருவரும் சார்பு காவல் ஆய்வாளர்களாக இருந்து பல்லாண்டு கால பட்டறிவு உடையவர்கள் என்பதும், குற்ற நிகழ்வுக்குப் பிறகு 90 நாட்கள் தலைமறைவாக கிருஷ்ணவேணி இருந்தார் என்பதும் கணக்கில் கொள்ளப்படாமல் விடுவித்து இருப்பது வியப்பு அளிப்பதாக உள்ளது!

அதே சமயம், குற்றம் சாட்டப்பட்ட தாய், தந்தை, மகன் மூவரும் "ஒரே கைபேசி மின்னணு கோபுர அலை வரிசையில் இருந்தார்கள்" என்பது மூவரும் குற்ற நிகழ்வுக்கு பின் ஒரே இடத்தில் இருந்தார்கள் என்பதை நிரூபிக்க போதுமானது அல்ல என்று சொல்லி, தாய் தந்தை இருவரையும் விடுவிப்பதற்கு ஏதுவாக உயர்நீதிமன்றம் இதை எடுத்துக் கொண்டுள்ளது!

கவின் கொலையில் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் போது, தாராபுரத்தில் கொலையுண்ட வழக்கறிஞர் முருகானந்தம் வழக்கின் முக்கிய சாட்சியை கொலை செய்வதற்கு கூலிப்படையை ஏற்பாடு செய்தார் என்ற குற்றச்சாட்டிலும் இவர் கைது செய்யப்பட்டு இருப்பதை உயர்நீதிமன்றம் பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளாதது வியப்பை தருவதாகவே உள்ளது!

மேலும் 7 ஆண்டுகளுக்கு முன், சரவணன் கைபேசி வாயிலாக காதலை கைவிடுமாறு கவினை மிரட்டினார் என்கிற கைபேசி உரையாடல் பதிவான மின்னணு சாட்சியத்தையும் உயர்நீதிமன்றம் கவனத்தில் எடுத்துக் கொள்ளாதது ஏமாற்றத்தை தருகிறது!

சாதியை இழிவு படுத்தி பொதுவெளியில் பொதுமக்கள் முன் சொன்னால் மட்டுமே, பட்டியலின மற்றும் பழங்குடி மக்கள் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டம் பிரிவுகள் 3(1)(r), 3(1)(s) மற்றும் 3(2)(v) -ன் கீழ் வரும் என்று குறுக்குவது கிடைக்க வேண்டிய நீதியை கிடைப்பதற்கான வழியை அடைப்பதாகும்!

கவின் - சரவணன், கிருஷ்ணவேணி இணையர் மகளுக்கும் இடையிலான காதல் இருவழிப் பாதையிலான முதிர்ச்சியான காதலே; இருவர் குடும்பமும் நல்ல பொருளாதார பின்னணி உடையவை; கவினும் அவர் காதலியும் உயர் படிப்பு படித்து முடித்து நல்ல வேலையில் இருந்தவர்கள்; இருவரும் ஒரே தாய் மொழியை கொண்டிருந்தவர்கள்; இதையெல்லாம் புறந்தள்ளி விட்டு கவின் ஏன் பொதுவெளியில் பட்டப் பகலில் கொல்லப்பட்டார்? ஆதிக்க சாதி மனப்பாங்கு அன்றி வேறு எதுவும் இல்லை. இவையெல்லாம் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் மேற்கண்ட பிரிவுகளை ஈர்க்காது என்ற முடிவுக்கு உயர் நீதிமன்றம் வந்திருப்பது புரியாத புதிராகவே உள்ளது! உச்ச நீதிமன்ற அமர்வு, ஆணவக்

கொலைச் செயலை "இந்தியாவின் இறுக்கமான படிநிலை சாதி அமைப்பிலிருந்து உருவான கொடூரமான "கௌரவக் கொலை" என்று " KP. Tamil Maran V State of Tamilnadu" (கண்ணகி முருகேசன் ஆணவக் கொலை வழக்கு) கூறியது குறிப்பிடத்தக்கது.

எனவே, இந்த விடுவிப்பு ஆணையை எதிர்த்தும் புலன் விசாரணை முறையாக, சரியாக செய்யப் படாமையால், மேலும் கூடுதல் புலன் விசாரணை (Further investigation) மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியும், உடன் உச்சநீதி மன்றத்தில் மேல்முறையீடு செய்து, திறம்பட இவ்வழக்கை நடத்த வேண்டும் என தமிழ்நாடு அரசை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பியூசிஎல் கோருகிறது.” என்று தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் சிவில் உரிமைக் கழகம் (பியூசிஎல்) தலைவர் இரா. முரளி, பொதுச் செயலாளர் து. சேகர் அண்ணாதுரை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

logo
Andhimazhai
www.andhimazhai.com