தமிழ்நாடு அரசின் மூன்றாவது அரசு பல் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையாக புதுக்கோட்டை அரசு பல் மருத்துவக் கல்லூரி - மருத்துவமனை அமைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் இன்று காலையில் தலைமைச்செயலகத்திலிருந்து காணொலி மூலம் இதைத் திறந்துவைத்தார்.
புதுக்கோட்டை மாவட்டத்தில் 8.89 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள பொது சுகாதாரத் துறை கட்டடங்களையும் அவர் திறந்துவைத்தார்.
தமிழ்நாட்டில் 70 ஆண்டுகளுக்குப் பிறகு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக, புதுக்கோட்டையில் 67 கோடியே 83 இலட்சம் ரூபாய் செலவில் இந்த மருத்துவமனை கட்டப்பட்டுள்ளது என்றும்
இக்கல்லூரியில் 2023-2024 ஆண்டிலிருந்து ஆண்டுதோறும் 50 மாணவர் சேர்க்கைக்காக அனுமதி பெறப்பட்டுள்ளது என்றும் அரசுச் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அரசு பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை 10.14 ஏக்கர் பரப்பளவில் மருத்துவமனை மற்றும் நிர்வாகக் கட்டடம், மாணவ மாணவியர் விடுதிக் கட்டடம், ஆசிரியர் மற்றும் முதல்வர் தங்கும் விடுதி போன்ற வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
கூடுதலாக, பல் மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமணைக்கு 5 கோடியே 10 இலட்சம் ரூபாய் மதிப்பிலான தேவையான அதிநவீன உபகரணங்கள் தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, இக்கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு தேவையான ஆசிரியர், நிர்வாகம், மற்றும் கல்விசாரா பணிகளுக்கு 148 பணியிடங்கள் தோற்றுவிக்கப்பட்டுள்ளன.
இதன்மூலம், தமிழகத்தின் மத்திய பகுதியில் உள்ள ஏழை எளிய மக்களுக்கு தரமான பல் மருத்துவச் சிகிச்சை பெறுவதற்கு வழிவகை ஏற்படும் என்றும் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதில் புதுக்கோட்டையில் சட்டத்துறை அமைச்சர் எஸ். இரகுபதி, மருத்துவத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத் துறை அமைச்சர் சிவ.வீ. மெய்யநாதன், மக்களவை உறுப்பினர் கே. நவாஸ் கனி, மாநிலங்களவை உறுப்பினர் எம்.எம். அப்துல்லா, சட்டமன்ற உறுப்பினர்கள் வி. முத்துராஜா, எம். சின்னதுரை, புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியர் மெர்சி ரம்யா, பொது சுகாதாரம் - நோய்த் தடுப்பு மருந்துத் துறை இயக்குநர் மரு.டி.எஸ். செல்வவிநாயகம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.