தலைநகர்த் தமிழ்ச் சங்க நிறுவனர் புலவர் த. சுந்தர ராசன் நாகர்கோவிலில் நேற்று காலமானார். அவருக்கு வயது 74.
சென்னை மாநகராட்சிப் பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிய புலவர் சுந்தரராசன், தலைநகர்த் தமிழ்ச் சங்கம் என்னும் அமைப்பை நிறுவி செயல்பட்டுவந்தார். தமிழுக்கான புலவர்கள் அமைப்பைப் போல இல்லாமல், தமிழ் உரிமைக்கான பல்வேறு தரப்பினரும் இந்த அமைப்பில் இடம்பெற்றிருந்தனர்.
வடக்கெல்லைப் போராட்ட வீரரும் வருவாய்த் துறை அதிகாரியுமான தணிகைமைந்தன், தையற்கலைஞர் தமிழ்ப் பேரவை அ.சி.சின்னப்பத் தமிழர் போன்ற சமூகத்தின் பல தரப்பினரும் இந்த அமைப்பில் இணைந்து தமிழ் உரிமைக்கான போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.
குறிப்பாக, 1990களின் இறுதியில் கருணாநிதி முதலமைச்சராகவும் தமிழ்க்குடிமகன் அமைச்சராகவும் இருந்தபோது, தமிழை ஆட்சி மொழியாக்க வேண்டும் எனும் கோரிக்கையை வலியுறுத்தி, நூறு தமிழறிஞர்கள் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் என அறிவித்து அதற்கான தயாரிப்பு மாநிலம் முழுவதும் முன்னெடுக்கப்பட்டது.
தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தின் முனைப்பில் எடுக்கப்பட்ட அந்தப் போராட்டத்துக்கான பிரச்சாரமே அப்போது சென்னையின் தெருமுனைக் கூட்டங்களில் பெருங்கூட்டமாக இருக்கும்.
சென்னை, பாரிமுனையில் அப்போது நடைபெற்ற கூட்டம் ஒன்றில் தமிழக பா.ஜ.க. தலைவராக இருந்த இல. கணேசன் கலந்துகொண்டு பேசமுற்பட்டபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து பிரச்னையாகி, காவல்துறையினர் வந்து கணேசனைப் பாதுகாப்பாக மீட்டுச்செல்லும் அளவுக்கு போராட்டக்காரர்கள் காட்டமாக இருந்தார்கள்.
பிரதமராக வாஜ்பாய் இருந்த அப்போது சமஸ்கிருதத்துக்கு சிறப்பு அந்தஸ்தும் அதிக நிதியும் அறிவித்தநிலையில், இல.கணேசன் அக்கூட்டத்துக்கு வந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவிக்கப்பட்டபடி சென்னை, வள்ளுவர் கோட்டத்தில் தொடங்கிய அந்தப் போராட்டம் மறைந்த சிலம்பொலி செல்லப்பன் தலைமையில் தொடங்கவிருந்தது. கடைசி நேரத்தில் அப்போதைய முதலமைச்சர் கருணாநிதி, அமைச்சர் க.அன்பழகன் ஆகியோரின் வேண்டுகோளுக்கு இணங்க அவர் பின்வாங்கிக்கொண்டார்.
ஆனாலும், தலைநகர் தமிழ்ச் சங்கத்தினர் அந்தக் கோரிக்கைக்கான போராட்டத்தைத் தொடர்ந்தனர்.
தமிழ் மொழியைச் செம்மொழியாக அறிவிக்கவும், திருக்குறளைத் தேசிய நூலாக அறிவிக்கவும் வலியுறுத்தி தலைநகர்த் தமிழ்ச் சங்கம் சார்பில் பல கருத்தரங்கங்கள், போராட்டங்களும் நடத்தப்பட்டன.
சென்னை, திருவனந்தபுரம், பெங்களூர், புதுதில்லி ஆகிய ஊர்களில் கருத்தரங்கங்கள் நடத்தி மைய அரசுக்கு சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். செம்மொழி வரலாற்றில் தலைநகர்த் தமிழ்ச் சங்கத்தைப் பற்றியும் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.
புலவர் சுந்தரராசன் முனைப்பெடுத்து சென்னை, வண்டலூரில் தலைநகர்த் தமிழ்ச் சங்கத்திற்காக ஒரு கட்டடத்தை அமைக்கச் செய்தார். அதன் முன்னால் பெங்களூர் தமிழ்ச் சங்கம் அன்பளிப்பாக வழங்கிய திருவள்ளுவர் சிலை நிறுவப்பட்டுள்ளது.
மூப்பு உடல்நலமின்மை காரணமாக புலவர் சுந்தரராசன் தன் 74 வயதில் சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம், அடைகாய்ச்சுவிளையில் இருந்துவந்தார்.
தலைக்குள் இருந்த கட்டியைச் சரிசெய்வதற்காக நாகர்கோவில் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
நேற்று முன்தினம் இரவு அறுவைச் சிகிச்சை செய்யப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி நேற்று காலையில் அவர் உயிரிழந்தார்.