பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் மறைவு!

பொம்மலாட்டக் கலைஞர் மு.கலைவாணன் மறைவு!
Published on

தமிழகத்தின் சிறந்த பொம்மலாட்டக் கலைஞர் கலைமாமணி முத்துக்கூத்தன் கலைவாணன் சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 68.

அண்மைக்காலமாக, உடல்நலம் குன்றி புற்றுநோய்ச் சிகிச்சை பெற்றுவந்த அவர், நலமாக இருந்துவந்தார். மீண்டும் உடல்நலம் பாதிக்கப்பட்டு நேற்று உயிரிழந்தார்.

திரைப்படப் பாடலாசிரியர் கலைமாமணி ந. மா. முத்துக்கூத்தனின் மகனான இவர், ஆறாயிரத்திற்கும் மேற்பட்ட இடங்களில் பொம்மலாட்ட நிகழ்வுகளை நிகழ்த்தியுள்ளார்.

அறிவியல் பகுத்தறிவுக் கருத்துகளும், சுற்றுச்சூழல் சிந்தனைகளும், தமிழ் மரபு போற்றும் கருத்துகளும் இவரின் நிகழ்வுகளில் இடம்பெற்றிருக்கும்.

சென்னை பொதிகை தொலைக்காட்சிக்காக இதுவரை இருநூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், "கலை மாமா" என்ற தலைப்பில் மக்கள் தொலைக்காட்சியில் தொண்ணூறுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும், வசந்து தொலைக்காட்சியில் நாற்பதுக்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளையும் வழங்கியுள்ளார்.

ஆசிரியர்களுக்கு இருநூறுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், குழந்தைகளுக்கு அறுநூற்றுக்கும் மேற்பட்ட பயிற்சி வகுப்புகளையும், பெற்றோருக்காக 54 பயிற்சி வகுப்புகளையும் நடத்தியுள்ளார்.

மூன்று திரைப்படங்களிலும், இரண்டு தொலைக்காட்சித் தொடர்களிலும் நடித்துள்ளார்.

மலேசியா, சிங்கப்பூர், இலங்கை, ஜப்பான் முதலிய நாடுகளிலும் தம் கலைப்பணியைச் செய்தவர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com