ஆர்.பி.உதயகுமார்
ஆர்.பி.உதயகுமார்

பா.ஜ.க. ஏன் ஜெயலலிதாவை துணைக்கு அழைக்கிறது? – முக்கிய நிர்வாகி சொல்லும் காரணம்!

பா.ஜ.க.வினர் ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கமும் அரசியல் சூழ்ச்சியும் இருப்பதாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன் செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ஜெயலலிதா இந்துத்துவா கொள்கை உடையவர் என கூறியிருந்தார்.

இதற்கு அ.தி.மு.க.வினர் கடுமையாக கண்டனம் தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக ஜெயக்குமார் உட்பட மூத்த முன்னாள் அமைச்சர்கள் கடுமையாக எதிர்வினையாற்றி வருகின்றனர். ஆனால் தனது கருத்தில் உறுதியாக இருக்கும் அண்ணாமலை, அ.தி.மு.க.வினரை விவாதத்துக்கு அழைத்துள்ளார்.

இந்நிலையில், தைரியம் இருந்தால் உங்களது முன்னாள் தலைவர்கள், இந்நாள் தலைவர்களை பற்றி சொல்லி தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கையை பெற முயற்சி எடுங்கள் என அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.

திருமங்கலம் தொகுதி டி.கல்லுப்பட்டி பேரையூர் பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஆர்.பி.உதயகுமார் முன்னிலையில் தங்களை அ.தி.மு.க.வில் இணைத்து கொண்டனர். அப்போது செய்தியாளர்களை சந்தித்த ஆர்.பி. உதயகுமார், பா.ஜ.க.வினருக்கு சவால் விட்டுள்ளார்.

அப்போது பேசிய அவர், “பா.ஜ.க.வினர் தலைவரைப் பற்றி கொள்கையைபற்றி பேசுவதில் எங்களுக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை. ஜெயலலிதாவின் சமூக நீதிக் கொள்கை, பெண்ணுரிமை கொள்கை, மாணவ மாணவியர் சமுதாயத்தின் நம்பிக்கை நட்சத்திரமாக இருந்த எல்லாவற்றையும் மூடி மறைத்து விட்டு உள்நோக்கத்தோடு அரசியல் காழ்ப்புணர்ச்சியோடு அவர்கள் சொல்வதனால் எந்த தாக்கமும் தமிழகத்தில் ஏற்படாது.

எங்கள் கொள்கை கோட்பாடுகளை அவர்கள் விளக்கம் சொல்லித்தான் தமிழக மக்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்ற அவசியம் இல்லை. அவர்கள் தங்களை அடையாளப்படுத்துவதற்காகவும் தங்களுக்கு முகவரி தேடுவதற்காகவும் தேசத்திற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்த ஜெயலலிதாவை துணைக்கு அழைத்துக் கொள்வதில் உள்நோக்கம் இருக்கிறது, அரசியல் சூழ்ச்சி இருக்கிறது .

உங்களுக்கு தைரியம் இருந்தால் வீரம் இருந்தால் நீங்கள் உங்கள் தலைவர்களை சொல்லி உங்கள் செல்வாக்கை சொல்லி, உங்கள் கொள்கைகளை சொல்லி, உங்கள் லட்சியங்களை சொல்லி உங்களது முன்னாள் தலைவர்கள் இந்நாள் தலைவர்களை சொல்லி இந்த தமிழ்நாட்டு மக்களுடைய நம்பிக்கையை பெற முயற்சி எடுங்கள். மக்கள் எதிர்காலத்தில், இந்த காலத்தில் எந்த காலத்திலும் ஆதரவுகொடுக்க மாட்டார்கள்.

இது தெரிந்த பிறகுதான் உங்களுடைய கொள்கைகள் கோட்பாடுகள் சித்தாந்தங்கள் தமிழகத்தில் எடுபடாது, மக்களிடத்திலே வரவேற்பு இல்லை, மக்களிடத்தில் நம்பிக்கை இல்லை என்று நீங்கள் முடிவு எடுத்த காரணத்தினால் இன்று அதிமுகவை வளர்த்தெடுத்த ஜெயலலிதாவை இன்றைக்கு புகழ்வது போல் புகழ்ந்து வஞ்சப்புகழ்ச்சி அணியாக உங்களுக்கு அடையாளத்தை ஏற்படுத்திக்கொள்ள துணைக்கு அழைப்பது போல் நீங்கள் பேசுகிறீர்கள். இதனை மக்கள், அதிமுக தொண்டர்கள்,பாஜக தொண்டர்கள் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள்." என்று ஆர்.பி. உதயகுமார் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com