நடிகரும் இயக்குநருமான பாக்யராஜின் இறுதி நிகழ்வில் நடிகை ராதிகா நெரிசலில் சிக்கிக்கொண்டு அவதிப்பட்டார். முன்னதாக, பாக்யராஜின் உடலை ஆம்புலன்சிலிருந்து இறக்கும்போதும் அவர் ஒரு கருத்தைக் கூறினார். இது சமூக ஊடகங்களில் பேசுபொருளான நிலையில், இன்று அவர் இரங்கல் அறிக்கையில் விளக்கத்தையும் கோரிக்கையையும் தெரிவித்துள்ளார்.
அவருடைய அறிக்கை விவரம்:
“ஐம்பது ஆண்டுகால நட்போடு பயணித்த நண்பருக்கு பிரியாவிடை கொடுத்திருக்கிறோம். ஒரு சிறந்த படைப்பாளி சிந்திக்க வைத்த எழுத்தாளர், கலையுலக நிகழ்வாக இருந்தாலும் சரி. குடும்ப நிகழ்வாக இருந்தாலும் சரி அவரோடு குடும்பாகிதமாக பழகிய நாட்களை நினைவுகூர்கிறோம்.
அவரது இந்த திடீர்ப் பிரிவு குடும்பத்தார்க்கும் நண்பர்களுக்கும், திரைத்துறையில் இருக்கின்ற சக கலைஞர்களுக்கும் ரசிகர்களுக்கும் ஏற்றுக்கொள்ள முடியாத பேரதிர்ச்சி. இரண்டு நாள்களுக்குமுன் எங்களுடன் குஷ்பு அவர்களின் மகள் திருமணத்தில் கவந்துகொண்டு அனைவரும் ஒன்றாக அமர்ந்து உணவகுத்திய நிலையில் திடீரென மறைந்தார். இன்று அவர் நம்மோடு இல்லை என்ற எதிர்பாராத அதிர்ச்சி செய்தி எங்கள் மனதை எப்படி ஆழமான துக்கத்தில் மூழ்கடிக்கச் செய்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அவரை இழந்து தவிக்கும் அனைவரும் பேரதிர்ச்சியில் இருந்து மீள முடியாமல் மனவேதனைபோடு இறுதி மரியாதை செலுத்துகின்ற இடம், அமைதி இல்லாமல் நிம்மதி இல்லாமல் மனதார அந்த ஆத்மாவிற்கு இறுதி மரியாதை செலுத்த முடியாமல் நடந்த சில நிகழ்வுகள் மனதிற்கு மிகுந்த வேதனையாக இருந்தது.
சமூக வலைதள தாக்கம் உடனுக்குடன் செய்திகளைத் தந்து யார் முதலிடம் பிடிக்கிறார்கள், அழுகையை எந்த அளவிற்கு சூம் செய்து காட்டி ஏற்ற வாசகம் போட்டு அதிக பார்வையாளர்களைக் கவர்கிறார்கள் என்று போட்டி போடுவதால், மனிதர்களின் யதார்த்தமான உணர்வுகளை மதிக்க இயலாமல், புரிதல் இல்லாத சமூகமாக இச்சமூகம் தள்ளப்படுகிறதோ என்ற ஐயத்துடன் யோசிக்கத் தோன்றுகிறது.
வருங்காலத்தில் இதே நிலை தொடர்வது தமிழர்களின் மானுட வாழ்வியல், பாரம்பரிய கலாச்சாரத்திற்கு நல்லதல்ல. சுய கட்டுப்பாடு, ஒழுக்கம் ஒருபுறம் இருந்தாலும், அங்கு நடந்த சில விரும்பத்தகாத நிகழ்வுகள் சமூகத்தில் இனி நடைபெறாமல் தடுத்திடல் வேண்டும்.
அரசும், திரையுலகமும் இணைந்து துக்கம் அனுசரிக்கும் இடங்களில் கண்ணியமும் மரியாதையும் காக்கும் வழிமுறைகளை வகுத்து நடைமுறைப்படுத்த அனைவரும் கலந்தாலோசித்து முடிவெடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
நண்பர் பாக்யராஜ் அவர்களின் மறைவிற்கு அரசு மரியாதை வழங்கிய முதலமைச்சர், நிகழ்விற்கு ஒத்துழைத்த அமைச்சர்களுக்கும் உரிய பாதுகாப்பு வழங்கி சிறப்பித்த தமிழக காவல்துறையினருக்கும் நெஞ்சார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறேன்.” என்று ராதிகா கூறியுள்ளார்.