
பா.ம.க.தலைவர் அன்புமணி தலைமையிலான தரப்பினர் போட்டியிடும் 18 தொகுதிகளிலும் அவர்களுக்கு வாக்களிக்க வேண்டாம் என அவருடைய தந்தை இராமதாஸ் கேட்டுக்கொண்டுள்ளார்.
இன்று பிற்பகல் அவர் இதுதொடர்பாக தனி வீடியோவையும் வெளியிட்டுள்ளார்.
“ அதிகாரத்தை வைத்து மக்களுக்கு சேவை செய்வது முக்கியம். அன்புமணி தரப்புக்கோ அதிகாரத்தை வைத்து பணம் பண்ணுவதுதான் நோக்கம். இதனால்தான் அன்புமணி வீட்டிலேயே படுத்துக்கொண்டு நாடாளுமன்றத் தேர்தலிலும் சட்டமன்றத் தேர்தலிலும் தன் மனைவியை நிற்கவைக்கிறார். நாடாளுமன்றத்தில் இவர் செல்வது இந்தியாவிலேயே மிகவும் குறைவு.
டெல்லிக்குப் போனால்தானே பேசுவதற்கு... அப்படிப் போகாமல் அப்பனுக்கே உளவுபார்த்த பிள்ளை எனச் சொல்வதற்கு எனக்கு வெட்கமாக இருக்கிறது. முக்கிய நாள்களில் அப்பாவுக்கு வாழ்த்து சொல்வதில்லை. சேலத்தில் மயக்கம் அடைந்து அப்பல்லோவில் சேர்க்கப்பட்ட என்னிடம் ஒரு வார்த்தைகூட நலம் விசாரிக்கவில்லை.
அன்புமணி துரோகி கும்பல் போட்டியிடும் தொகுதிகளில் வாக்களிக்காதீர்கள். இதைச் சொல்வதற்கு கசப்பாக இல்லையா என... பணம் பண்ணும் வித்தையைத்தான் கற்றுக்கொண்டிருக்கிறார்கள். இவர்கள் சட்டமன்றத்தில் எதையும் செய்யப் போவதில்லை. மக்களைப் பற்றி கவலைப்பட மாட்டார்கள். உங்களுக்கு சேவை செய்கிறவர்களை, நல்லவர்களைத் தேர்ந்தெடுங்கள்.” என்று இராமதாஸ் வீடியோவில் பேசியுள்ளார்.