உயர்நீதிமன்றத்தில் தமிழ் போராட்டம்... சென்னை, எழும்பூர்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் போராட்டம்... சென்னை, எழும்பூர்.

7ஆவது நாளாக உயர்நீதிமன்றத்தில் தமிழ் போராட்டம்- மைய, மாநில அரசுகளுக்கு இராமதாஸ் கண்டனம்!

தமிழை உயர்நீதிமன்ற மொழியாக்க அரசு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி நடத்தப்படும் தொடர் உண்ணாவிரதத்தைக் கண்டுகொள்ளாமல் இருப்பதாக மைய, மாநில அரசுகளுக்கு பா.ம.க. நிறுவனர் இராமதாசு கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கை:

”சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி சென்னையில் 25 பேர் சாகும்வரை உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டுள்ளனர். உண்ணாநிலை இன்று ஏழாவது நாளை எட்டியுள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற மத்திய, மாநில அரசுகள் இன்று வரை எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளாதது கண்டிக்கத்தக்கதாகும்.

சென்னை எழும்பூர் இராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்திற்கு அருகில், தமிழை சென்னை உயர்நீதிமன்ற அலுவல் மொழியாக்க வேண்டும் என்ற கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி உயர்நீதிமன்றத்தில் தமிழ்& மக்கள் இயக்கம், உயர்நீதிமன்றத்தில் தமிழ் & வழக்குரைஞர் செயல்பாட்டுக் குழு ஆகியவற்றின் சார்பில் 25 பேர் கடந்த பிப்ரவரி 28&ஆம் தேதி முதல் சாகும்வரை உண்ணாநிலை போராட்டம் மேற்கொண்டிருக்கின்றனர். இது தொடர்பாக தமிழக சட்டப்பேரவையில் 2006&ஆம் ஆண்டு திசம்பர் 6&ஆம் நாள் நிறைவேற்றப்பட்டு, 7&ஆம் நாள் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்ட தீர்மானத்திற்கு ஒப்புதல் பெற வேண்டும் என்பது தான் போராட்டக் குழுவினரின் முதன்மைக் கோரிக்கையாக உள்ளது.

உயர்நீதிமன்றத்தில் தமிழ் போராட்டம்... சென்னை, எழும்பூர்.
உயர்நீதிமன்றத்தில் தமிழ் போராட்டம்... சென்னை, எழும்பூர்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வழக்கறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும் நடத்தி வரும் இந்தப் போராட்டத்திற்கு பாட்டாளி மக்கள் கட்சி அதன் முழுமையான ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறது. அதற்கான தார்மிகக் கடமை எனக்கு உள்ளது. காரணம், சென்னை உயர்நீதிமன்றத்தின் வழக்காடும் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானத்தை 2006&ஆம் ஆண்டு திசம்பர் 6&ஆம் தேதி அப்போதைய முதலமைச்சர் கலைஞர் கொண்டு வந்து நிறைவேற்றியதற்கு காரணமே நான் தான். உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்ற எனது தொடர் வலியுறுத்தலை ஏற்று தான் அத்தகைய தீர்மானத்தை கலைஞர் கொண்டு வந்தார். அதை கலைஞரே பல்வேறு தருணங்களில் ஒப்புக் கொண்டிருக்கிறார்.

தமிழக சட்டப்பேரவையின் தீர்மானத்தை ஏற்றுக் கொண்டு, சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க மத்திய அரசுக்கு எந்த தடையும் இல்லை. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 348(2) ஆவது பிரிவின்படி உயர்நீதிமன்ற ஆட்சி மொழியாக இந்தி அல்லது சம்பந்தப்பட்ட மாநிலத்தின் மொழியை அறிவிக்க குடியரசுத் தலைவருக்கு அதிகாரம் உண்டு. இதைப் பயன்படுத்தி அலகாபாத், மத்தியப் பிரதேசம், பிகார், ராஜஸ்தான் ஆகிய உயர்நீதிமன்றங்களின் வழக்காடும் மொழியாக இந்தி அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கலாமா? என்ற உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு கருத்து கேட்டது தான் பெரும் தவறாகும். உச்சநீதிமன்றம் அனுமதி அளிக்காததால் தான் தமிழ் இன்னும் உயர்நீதிமன்ற அலுவல் மொழியாகவில்லை.

ஓர் உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அந்த மாநிலத்தின் மொழியை அறிவிப்பது குறித்து உச்சநீதிமன்றத்திடம் கருத்துக் கேட்கத் தேவையில்லை என்று சட்டம் மற்றும் நீதித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு பல அறிக்கைகளை தாக்கல் செய்துள்ளது. இது தொடர்பாக உச்சநீதிமன்றத்தின் கருத்தைக் கேட்கும் நடைமுறையை கைவிடும்படி கடந்த 2015&ஆம் ஆண்டே உள்துறை அமைச்சகத்துக்கு சட்டத் துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழு கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், அதன் மீது கடந்த 9 ஆண்டுகளாக உள்துறை அமைச்சகம் முடிவெடுக்காததும் தமிழுக்கு பின்னடைவு ஏற்படுவதற்கு காரணம் ஆகும்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்கக் கோரும் தீர்மானம் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டு 18 ஆண்டுகள் ஆகி விட்டன. அந்தத் தீர்மானம் தமிழ்நாடு அரசுக்கே திருப்பி அனுப்பப்பட்டு 15 ஆண்டுகள் நிறைவடைந்து விட்டன. ஆனாலும், தமிழை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக அறிவிக்க அதன் பிறகு தமிழகத்தை ஆட்சி செய்த அரசுகள் எதையும் செய்யவில்லை.

கடந்த 6 ஆண்டுகளில் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிகளாக இருந்த அனைவரும் உயர்நீதிமன்றங்களில் மாநில மொழிகளை அலுவல் மொழியாக்க ஆதரவு தெரிவித்து வருகின்றனர். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோரும் இந்தக் கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர். இத்தகைய சூழலில் சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிப்பதற்கான நடைமுறை என்ன? என்பதை அறிந்து தமிழக அரசு செயல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், பலமுறை நான் வலியுறுத்தியும் அதை செய்யத் தமிழக அரசு தவறி விட்டது. தமிழ் மீது அவர்களுக்குள்ள அக்கறை அவ்வளவு தான்.

சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழியாக தமிழை அறிவிக்க வேண்டும் என்பது ஐம்பது ஆண்டுகளுக்கும் மேலாக வலியுறுத்தப்பட்டு வரும் கோரிக்கை ஆகும். அது இன்னும் கோரிக்கையாக இல்லாமல் செயல்வடிவம் பெறுவது மத்திய, மாநில அரசுகளின் கைகளில் தான் உள்ளது. எனவே, மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தின் அலுவல் மொழி தமிழ் என்ற ஐம்பதாண்டு கால கனவு நனவாவதை உறுதி செய்ய வேண்டும்.” என்றும் இராமதாசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com