ஆஸ்துமா, புற்றுநோய் தரக்கூடிய மரங்களை வளர்க்க விடலாமா?

Conocarpus trees
கோனாகார்ப்பஸ் மரங்கள்
Published on

ஆஸ்துமா, புற்றுநோய் போன்ற நோய்களை ஏற்படுத்தக்கூடிய மரங்களை அரசே வளர்க்கச் செய்யலாமா என எதிர்ப்பு எழுந்துள்ளது. 

தமிழ்நாட்டில் பசுமைப்போர்வையை அதிகரிக்கும் நடவடிக்கை என்ற போர்வையில் கோனாகார்ப்பஸ் (Conocarpus) என்கிற வகை மரங்களை தமிழக அரசு அதிக அளவில் வளர்த்து வருகிறது. சென்னை நீலாங்கரை கடற்கரைப் பகுதியிலும், தூத்துக்குடி, நெல்லை உட்பட்ட தமிழ்நாட்டின் பெரும்பாலான மாவட்டங்களிலும் சாலையோரங்கள், சாலைகளின் நடுப்பகுதிகள், பூங்காக்கள்,  கல்விநிறுவன வளாகங்கள், தனியார் நிறுவன வளாகங்களில் இந்த வகை மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில் வளர்க்கப்படுகின்றன.

இந்த விவரங்களை விவரித்துள்ள பா.ம.க. நிறுவனர் இராமதாசு, சுற்றுச்சூழலுக்கும், மனித உடல்நலத்திற்கும் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும் இந்த வகை மரங்களை அரசே நடுவதா எனக் கண்டனம் தெரிவித்துள்ளார். 

”தென் அமெரிக்கா, ஆப்பிரிக்கக் கண்டங்களில் அதிக எண்ணிக்கையில் காணப்படும் கோனாகார்ப்பஸ் வகை மரங்களின் மலர்கள் ஆண்டுக்கு இரு முறை மகரந்தச் சேர்க்கை நடத்தும் திறன் கொண்டவை. அப்போது அந்த மலர்களில் இருந்து வெளிவரும் மகரந்த தூள்கள் மனிதர்களின்  சுவாச மண்டலத்திற்குள் நுழைந்து சளி, இருமல், மூச்சடைப்பு உட்பட்ட சுவாசக் குறைபாடுகளை ஏற்படுத்தும்; இந்த மரங்களின் அருகில் நீண்ட காலம் வசிப்பவர்களுக்கு ஆஸ்துமா போன்ற நோய்கள் ஏற்படும் என்றும், புற்றுநோய் ஏற்படும் ஆபத்தும் அதிகம் என்றும் சுற்றுச்சூழல் வல்லுநர்கள் எச்சரித்துள்ளனர்.

கோனாகார்ப்பஸ் வகை மரங்கள் அடர்த்தியாகவும்,  வேகமாகவும் வளரும் என்பதைத் தவிர்த்து இந்த மரங்களால் எந்த பயனும் இல்லை. பார்ப்பதற்கு பசுமையாகவும், அழகாகவும் காட்சியளிக்கும் இந்த வகை மரங்களின் இலைகளை எந்தக் கால்நடைகளும் உண்ணாது. இந்த மரத்தில் குருவிகள் கூடு கட்டாது. தேனீக்கள்கூட இந்த மரத்தை அண்டாது. அதுமட்டுமின்றி, நிலத்தடி நீரை அதிக அளவில் உறிஞ்சக் கூடியவை.” என அந்த மரத்தின் பாதகங்களை இராமதாசு பட்டியல் இட்டுள்ளார். 

அதிக வெப்பத்தைத் தாங்கக் கூடியவை எனும் ஒற்றைக் காரணத்திற்காக அரபு நாடுகளில் கோனாகார்ப்பஸ் மரங்கள் மிக அதிக எண்ணிக்கையில்  வளர்க்கப்பட்டன. ஆனால், வெப்பத்தைத் தாங்கும் தன்மையால் கிடைக்கும் நன்மையை விட, தீமைகள் அதிகம் என்பதால் அரபு நாடுகளில் இந்த வகை மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன;  உலகில் மேலும் பல நாடுகளிலும் கோனாகார்ப்பஸ் மரங்களை வளர்க்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். 

”குஜராத் மாநிலம் வதோதரா நகரில் கடந்த 2017-18 ஆம் ஆண்டுகளில் 24 ஆயிரம் கோனாகார்ப்பஸ் மரங்கள் நடப்பட்டன. அந்த மரங்கள் தினமும் ஒரு லட்சம் லிட்டர் வீதம் ஆண்டுக்கு மூன்றரை கோடி லிட்டர் நிலத்தடி நீரை உறிஞ்சி அப்பகுதியை பாலைவனமாக மாற்றி வருகிறது. இதைத் தொடர்ந்து குஜராத், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய மாநிலங்களிலும் கோனாகார்ப்பஸ் மரங்கள் தடை செய்யப்பட்டுள்ளன.” என்பதையும் இராமதாசு சுட்டிக்காட்டியுள்ளார். 

தூத்துக்குடி உட்பட்ட மாவட்ட நிர்வாகங்களிடம் பல மாதங்களுக்கு முன்பே இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ள போதிலும் தமிழக அரசும், மாவட்ட நிர்வாகங்களும் இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை. எனவே தமிழக அரசு  இம்மரங்களைத்  தடைசெய்வது மட்டுமின்றி,  மக்கள் வாழும் பகுதிகளில் வளர்க்கப்பட்டுள்ள இந்த வகை மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.  

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடரFacebookTwitterYoutubeInstagram

logo
Andhimazhai
www.andhimazhai.com