தமிழகப் பகுதியை கேரளம் சொந்தமாக்க முயல்வதா?

பந்தலூர், நீலகிரி
பந்தலூர், நீலகிரி
Published on

நீலகிரி மாவட்டம், பந்தலூர் கிராமம் அருகே தமிழக, கேரள மாநிலங்களின் எல்லையாக தாளூர் பகுதியை தங்கள் எல்லைக்குள் வருவதாக கேரளத் தரப்பில் பிரச்னையை உருவாக்கியுள்ளனர்.  

இந்த விவகாரத்தில் இரு தரப்புகளும் இணக்கமாகப் போகும்வகையில் ஒரு முடிவை எடுக்கவேண்டும் என்று பா.ம.க. நிறுவனர் இராமதாசு கேட்டுக்கொண்டுள்ளார்.

அறிக்கை ஒன்றில், இதை வலியுறுத்தியுள்ள அவர், ”1956 ஆம் ஆண்டு States Reorganisation Act மூலம் மொழிவாரி மாநிலங்கள் அடிப்படையில் மாநில எல்லைகள் நிர்ணயிக்கப்பட்டது. அந்தவகையில் இன்றைய தமிழக, கேரள எல்லைகள் நிரந்தரமாக அமைக்கப்பட்டுள்ளன. நீலகிரி மாவட்டம், பந்தலூர் கிராமம் அருகே தமிழக, கேரள மாநிலங்களின் எல்லையாக தாளூர் பகுதியில் உள்ள ஒரு பாலம் 2 மாநிலங்களையும் பிரிக்கிறது. இந்நிலையில் சில நாள்களுக்குமுன் இப்பகுதியில் கேரள பொதுப்பணித்துறையினர், "கேரளா உங்களை வரவேற்கிறது" என்று அறிவிப்பு பலகை வைத்தனர்.” என்று விவரித்துள்ளார். 

தமிழகத்துக்குச் சொந்தமான பகுதியை கேரளம் சொந்தம் கொண்டாடுவதாகக் கூறி அப்பகுதியினர் திரண்டனர். இதனால், அங்கு பதற்றம் ஏற்பட்டது. 2 மாநில போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டனர். திரண்ட மக்களிடம் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர்.

2018-ல் தமிழக பகுதியில் கேரளா சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டது. இதை அறிந்த அப்பகுதி மக்கள் தமிழக நிலம் பறிபோவதாக நீலகிரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு கொடுத்தனர். அந்தப் பகுதியைப் பார்வையிட்ட மாவட்ட நிர்வாகம் கேரள மாநில நிர்வாகத்திடம் பேசி இதற்குத் தீர்வு காணப்படும் என்று உறுதி அளித்தது.

இதற்கிடையே 2018-ம் ஆண்டு கேரள நெடுஞ்சாலை துறையினர் அந்தப் பகுதி கேரளத்தைச் சேர்ந்தது என்பதை குறிக்கும் வகையில் சிவப்புக் கோடு போட்டனர். அத்துடன், ‘நென்மேணி ஊராட்சி உங்களை வரவேற்கிறது’ என்று தமிழக எல்லையில் அறிவிப்பு பலகை வைத்தனர்.

இப்போது இந்த பிரச்னை மீண்டும் எழுந்துள்ளது.

நீலகிரி மாவட்ட ஆட்சியர் பவ்யா, “தமிழக எல்லையான தாளூர், கேரள மாநிலம் வயநாடு மாவட்ட எல்லையாகவும் உள்ளது. அந்தப் பகுதியில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டதால் பிரச்னை எழுந்துள்ளது. தாளூர் பிரச்சனை தொடர்பாக வயநாடு மாவட்ட ஆட்சியரிடம் பேசியுள்ளோம். ஏற்கனவே இருந்த அறிவிப்பு பலகைக்கு பதிலாக புது பலகை வைத்துள்ளனர். அதை அகற்ற கூறியுள்ளோம். இந்த பிரச்னை தொடர்பாக 2 மாநிலம் சார்பில் டிஜிட்டல் சர்வே செய்யப்படவுள்ளது. அதுவரை முன்பிருந்த நிலையே தொடர வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 2 மாநிலங்கள் சார்பில் சர்வே முடிந்ததும் எல்லை தொடர்பாக முடிவு செய்யப்படும்” என்று கூறியுள்ளார். 

”ஏற்கனவே முல்லை பெரியாறு அணை விவகாரத்தில் அணையின் பாதுகாப்பு, நீர்மட்டம் போன்றவைகளில் இரு மாநிலங்களுக்கும் கருத்து வேறுபாடு உள்ளது” என்பதைச் சுட்டிக்காட்டியுள்ள இராமதாசு, ”தேவிகுளம் – பீர்மேடு பகுதிகளை தமிழகத்தில் இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் நிலுவையில் உள்ளது” என்றும் குறிப்பிட்டுள்ளார்.

”எனவே இவ்விவகாரங்கள் தொடர்பாக இரு மாநிலங்களுக்கிடையே குழு அமைத்து இவ்விவகாரங்களுக்கு நிரந்தர தீர்வுகாண வேண்டும். மேலும் இரு மாநில எல்லையோர பகுதிகளில் வாழும் மக்களின் அமைதிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்கவேண்டியது இரு மாநிலங்களின் கடமை.” என்றும் இராமதாசு கூறியுள்ளார். 

logo
Andhimazhai
www.andhimazhai.com