பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் இராமதாஸ்

ஆறாவது விரலாக தி.மு.க. - பா.ம.க. தொண்டர்களை உசுப்பும் இராமதாஸ் கடிதம்!

மக்களவைத் தேர்தலில் பா.ஜ.க. அணியில் இடம்பெற்றுள்ள பா.ம.க. 10 தொகுதிகளில் வாக்குகளை சேகரித்துவருகிறது. அக்கட்சியின் தலைவர் அன்புமணியும் நிறுவனர் இராமதாசும் முதன்மையாகப் பிரச்சாரத்தில் ஈடுபட்டுவருகின்றனர். இடையிடையே மூப்பு காரணமாக இராமதாசு ஓய்வெடுத்தபடி பிரச்சாரத்தைத் தொடர்கிறார். 

இதற்கிடையில் இராமதாசு தன் கட்சித் தொண்டர்களை உற்சாகப்படுத்தும் வகையில், மறைந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி பாணியில் கடிதங்களையும் எழுதிவருகிறார். 

இன்று அவர் வெளியிட்டுள்ள கடிதத்திலிருந்து...

“தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இந்தத் தேர்தல் மிகவும் முக்கியமானத் தேர்தல். ‘‘கோரிக்கை அற்றுக் கிடக்குதண்ணே இங்கு வேரிற் பழுத்த பலா’’ என்பதைப் போல தமிழ்நாட்டின்  தேவைகளுக்காகவும், கோரிக்கைகளுக்காகவும் நாடாளுமன்றத்தில் குரல் கொடுக்க ஆள் இல்லை. 2014&ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் அதிமுக சார்பில் 37 பேர் வெற்றி பெற்று நாடாளுமன்ற மக்களவைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து 2019&ஆம் ஆண்டில் திமுக கூட்டணி சார்பில் 38 பேர் வெற்றி பெற்று தில்லிக்கு சென்றனர். ஆனால், அவர்கள் ஆறாவது விரலாகத் தான் இருந்தனர். அவர்களால் அவர்களைத் தேர்வு செய்த தொகுதிகளின் மக்களுக்கோ, ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கோ எந்தவித பயனும் ஏற்படவில்லை.

தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்காக மத்திய அரசிடமிருந்து கேட்டுப் பெற வேண்டியவை ஏராளமாக உள்ளன. மக்களவை பிரதிநிதித்துவத்தை மாநிலத்தின் வளர்ச்சிக்காக பயன்படுத்திக் கொள்வது எப்படி? என்பதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக திகழ்வது பா.ம.க.தான். தமிழ்நாட்டில் மருத்துவக் கட்டமைப்புகளும், தொடர்வண்டிக் கட்டமைப்புகளும் மலை போல வானுயர்ந்து நிற்கின்றன என்றால் அதற்குக் காரணம் அத்துறைகளுக்கு பொறுப்பு வகித்த பா.ம.க. பிரதிநிதிகள் தான்.

பா.ம.க. காலத்தில் 15 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்ட பல தொடர்வண்டித் திட்டங்கள் இன்னும் செயல்படுத்தப்படாமலேயே கிடக்கின்றன.  கால ஓட்டத்தில் தமிழகத்திற்கான தேவைகள் அதிகரித்திருக்கின்றன. அவற்றை நிறைவேற்ற வேண்டும் என்றால், தமிழகத்தின் கோரிக்கைகளுக்காக குரல் கொடுக்கக் கூடிய, செயல்படக்கூடிய உறுப்பினர்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பப்பட வேண்டும். அதற்கு பா.ம.க. 10 தொகுதிகளிலும் கண்டிப்பாக வெற்றி பெற்றாக வேண்டும்.” என்று இராமதாசு அக்கடிதத்தில் கூறியுள்ளார். 
 

Related Stories

No stories found.
logo
Andhimazhai
www.andhimazhai.com