‘தி.மு.க.வின் 505-இல் 373 வாக்குறுதிகள்... அன்புமணி குற்றச்சாட்டு!

விடியல் எங்கே புத்தக வெளியீட்டு நிகழ்வு
விடியல் எங்கே புத்தக வெளியீட்டு நிகழ்வு
Published on

2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக கொடுத்த 505 வாக்குறுதிகளில் 373 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.

சென்னை தி.நகரில் தி.மு.க. தேர்தலின்போது அளித்த வாக்குறுதிகளில் நிறைவேற்றப்படாத வாக்குறுதிகளை சுட்டிக்காட்டி 'விடியல் எங்கே?’ என்ற பெயரில் புத்தகத்தை பா.ம.க. தலைவர் அன்புமணி இன்று வெளியிட்டார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முக்கிய அம்சங்கள்

1. 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி, மக்களுக்கு ஆசைகாட்டி அவர்களின் வாக்குகளை கைப்பற்றும் நோக்குடன் திமுக தேர்தல் அறிக்கை வெளியிட்டது. ஆனால், அந்த தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளில் பெரும்பாலானவற்றை ஆட்சிக்கு வந்த பின் திமுக அரசு நிறைவேற்றவில்லை.

திமுக எத்தனை வாக்குறதிகளை அளித்தது? அவற்றில் நிறைவேற்றப்பட்டவை எவ்வளவு? நிறைவேற்றப்படாதவை எவ்வளவு? அரைகுறையாக நிறைவேற்றப்பட்டவை எவ்வளவு? என்பதை பட்டியலிடும் ஆவணம் தான் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் தயாரித்து வெளியிடப்படும் “விடியல் எங்கே?” என்ற தலைப்பிலான ஆவணம் ஆகும்.

திமுக தேர்தல் வாக்குறுதிகள்

2. திமுக தேர்தல் அறிக்கையில் அளிக்கப்பட்டிருந்த வாக்குறுதிகளின் விவரம் வருமாறு:

1. திமுக அளித்த வாக்குறுதிகளின் எண்ணிக்கை...................................... 505

2. முழுமையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்................................... 66

3. அரைகுறையாக நிறைவேற்றப்பட்ட வாக்குறுதிகள்............................. 66

4. நிறைவேற்றப்படாத வாக்குறுதிகள்............... 373

அதாவது, திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளில் 66 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. மீதமுள்ள 439 வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை.

3. 2021 சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி திமுக அளித்த வாக்குறுதிகளில் 12.94 சதவீதம் மட்டும்தான் முழுமையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. மீதமுள்ள 87.06 சதவீதம் வாக்குறுதிகள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

4. திமுகவின் தேர்தல் அளிக்கையில் அளிக்கப்பட்ட 505 வாக்குறுதிகள் தவிர, கூடுதலாக 5 தேர்தல் வாக்குறுதிகளை தேர்தல் பரப்புரையின் போது திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அளித்திருந்தார். ஆனால், அந்த வாக்குறுதிகளில் ஒன்றுகூட இன்றுவரை நிறைவேற்றப்படவில்லை.

மாநில சுயாட்சி, தமிழ் வளர்ச்சி

5. மாநில சுயாட்சி, கல்வி வளர்ச்சி ஆகியவை சார்ந்து மொத்தம் 12 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 3 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன. ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது.

6. ஈழத் தமிழர் நலன் தொடர்பாக திமுக சார்பில் 4 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் ஒன்றுகூட நிறைவேற்றப்படவில்லை.

நிர்வாக சீர்திருத்தம்; சேவை உரிமைச் சட்டம் இல்லை

7. நிர்வாக சீர்திருத்தம் தொடர்பாக மொத்தம் 9 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 8 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. ஒரே ஒரு வாக்குறுதி மட்டுமே அரைகுறையாக நிறைவேற்றப்பட்டிருக்கிறது.

நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:

* லோக் அயுக்தா அமைப்பு வலுப்படுத்தப்பட்டு அமைச்சர்கள் உள்ளிட்டோர் மீதான குற்றங்கள் விரைந்து விசாரிக்கப்பட்டு தண்டனை வழங்கப்படும். (வாக்குறுதி எண். 18)

* சேவை உரிமைச் சட்டம் நிறைவேற்றப்பட்டு செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண்.19)

* ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்க சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்கப்படும். (வாக்குறுதி எண். 21)

* அரசு நிர்வாகத்தில் சிக்கன நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். அமைச்சர்களின் தேவையற்ற செலவு, பயணங்கள் தவிர்க்கப்படும். (வாக்குறுதி எண். 24)

உழவர்கள் நலன்

8. உழவர்கள் நலன் மற்றும் வேளாண்மை தொடர்பாக மொத்தம் 56 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 41 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 7 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 8 வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளன.

நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:

* ஊரகப் பகுதிகளில் உற்பத்தி செய்யப்படும் அனைத்துப் பொருட்களையும் விற்பனை செய்வதற்கான சந்தைகள் உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் - 30)

* கேரளாவில் செயல்படுத்தப்படுவதைப்போல் தமிழ்நாட்டில் அனைத்து வேளாண் விளைபொருட்களுக்கும் கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படும். (வாக்குறுதி எண்-32)

* விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமல் விளை நிலங்கள் வேறு பயன்பாட்டுக்கு மாற்றப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் - 43)

* ஒவ்வொரு ஒன்றியத்திலும் தானிய சேமிப்புக் கிடங்குகள் அமைக்கப்படும். இவை உலர் களங்களுடன் கூடிய கொள்முதல் நிலையங்களுடன் இணைக்கப்படும். (வாக்குறுதி எண்-50)

* கிருஷ்ணகிரி மாவட்டம் ஜீனூரில் 360 ஏக்கரில் தோட்டக்கலைப் பல்கலைக் கழகம் தொடங்கப்படும். (வாக்குறுதி எண் - 53)

* தென் தமிழ்நாட்டில் மதுரையில் வேளாண் பல்கலைக் கழகம் அமைக்கப்படும். (வாக்குறுதி எண் - 54)

* நியாயவிலைக் கடைகளில் நாட்டுச் சர்க்கரை, வெல்லம் ஆகியவற்றை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் - 68)

* தமிழ்நாட்டில் அனைத்து வகை விதை நெல்களுக்கும், மொத்தம் 1.05 லட்சம் டன் அளவுக்கு கிலோவுக்கு ரூ.10 வீதம் உழவர்களுக்கு மானியம் வழங்கப்படும். (வாக்குறுதி எண் - 78)

நீர்ப்பாசனத் திட்டங்கள் இல்லை

9. நீர் மேலாண்மைத் துறை தொடர்பாக 29 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டிருந்தன. அவற்றில் 23 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. 4 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 2 வாக்குறுதிகள் மட்டுமே முழுமையாக நிறைவேற்றப்பட்டிருக்கின்றன.

நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:

* நீர்நிலைகளை மேம்படுத்துவதற்கான நீர் மேலாண்மைத் திட்டம் முதல் கட்டமாக ரூ.10 ஆயிரம் கோடி நிதியுதவியுடன் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் - 89)

* சென்னை மாநகரின் கூவம், அடையாறு, கொசஸ்தலை ஆறு மற்றும் ஏரிகளின் பாதுகாப்பிற்காக ரூ.5 ஆயிரம் கோடி மதிப்பீட்டில் சிறப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் - 93)

* நொய்யல் ஆறு சீர்படுத்தப்பட்டு, பவானி - நொய்யலாறு - அமராவதியாறு இணைப்புத் திட்டம் செயல்படுத்தப்படும். (வாக்குறுதி எண் - 103)

* சேலம்-மேச்சேரி நீரேற்றுத் திட்டம் நிறைவேற்றப்படும். (வாக்குறுதி எண் - 106)

* கொளத்தூர் தோணிமடுவுத் திட்டம் - நான்கு மலைகளிலிருந்து வரக்கூடிய நீரைத் தடுப்பணை கட்டித் தேக்கி வைத்து விவசாயத்திற்குப் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும். (வாக்குறுதி எண் - 107)

* கிருஷ்ணகிரி மாவட்டம் படேதலாவ் ஏரியில் இருந்து வெண்ணம்பள்ளி, அச்சமங்கலம் உள்ளிட்ட 5 கால்வாய்களையும் நக்கல்பட்டி, புதூர் ஆகிய 10 ஏரிகளையும் இணைக்கும் வகையில் புதிய கால்வாய்கள் வெட்டப்படும். (வாக்குறுதி எண் - 110)

மீனவர்கள் நலன்

10. மீனவர்களின் நலன்கள், மீனவர்களின் பாதுகாப்பு தொடர்பாக 25 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டு இருந்தன. அவற்றில் ஒரே ஒரு வாக்குறுதிகூட முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. 5 வாக்குறுதிகள் அரைகுறையாக நிறைவேற்றப்பட்டுள்ளன. 20 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.

நிறைவேற்றப்படாத முக்கிய வாக்குறுதிகள்:

* மீனவர்கள் நலனைக் காக்க கச்சத்தீவை மீட்டெடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும். (வாக்குறுதி எண் - 113)

* மீனவர்களை பழங்குடியினர் பட்டியலில் சேர்த்து அதற்கான சலுகைகளைப் பெற்றுத்தர திமுக அரசு நடவடிக்கை எடுக்கும். (வாக்குறுதி எண் - 114)

* மீனவர்களுக்கு 2 லட்சம் புதிய வீடுகள் கட்டித்தரப்படும்; (வாக்குறுதி எண் - 116)

* மீன்வளத் துறையில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்க மீன்வளக் கல்லூரிகள், கடல்சார் கல்லூரிகள் புதிதாக உருவாக்கப்படும். (வாக்குறுதி எண் - 121)

* அனைத்து மீனவ கிராமங்களுக்கும் மீன் உலர்த்தும் தளம் அமைத்துத் தரப்படும். (வாக்குறுதி எண் - 130)

இவைதவிர, 10 ஆண்டு தொலைநோக்குத் திட்டத்திற்கான 7 உறுதிமொழிகளை திருச்சியில் நடைபெற்ற திமுக மாநாட்டில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார். அவை அனைத்தும் 10 ஆண்டு திட்டங்கள் என்பதால், அவை நிறைவேற்றப் பட்டிருக்கின்றனவா? என்பதை இப்போதே அறுதியிட்டுக் கூறமுடியாது.

அதே நேரத்தில், திமுக ஆட்சிப் பொறுப்பேற்று முழுமையாக 50 மாதங்கள் முடிவடைந்துள்ள நிலையில், பொருளாதாரம், வேளாண்மை, நீர்வளம், கல்வி மற்றும் சுகாதாரம், நகர்ப்புற மேலாண்மை, ஊரகக் கட்டமைப்பு, சமூகநீதி சார்ந்த 7 உறுதிமொழிகளில் சொல்லிக்கொள்ளும்படியாக எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com