பாமக நிறுவனர் ராமதாஸுக்கு ஆஞ்ஜியோகிராம் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. அவருக்கு பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருப்பதாக பாமக தலைவர் அன்புமணி கூறியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்டார்.
இதய பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு இதய சிகிச்சை நிபுணர்கள் இன்று காலை ஆஞ்சியோகிராம் பரிசோதனை மேற்கொண்டனர்.
ஆஞ்சியோகிராம் செய்யப்படுவதையொட்டி, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள பாமக நிறுவனர் ராமதாஸை இன்று காலை நேரில் சந்தித்து உடல் நலம் குறித்து விசாரிக்க அன்புமணி மருத்துவமனைக்கு வந்தார்.
பிறகு, மருத்துவமனையிலிருந்து வெளியே வந்த அன்புமணி, செய்தியாளர்களிடம் பேசுகையில், ராமதாஸுக்கு ஆஞ்ஜியோகிராம் செய்யப்பட்டுள்ளது. அவர் 6 மணி நேரம் தீவிர சிகிச்சைப் பிரிவில் வைக்கப்பட்டுள்ளார். அவரைப் பரிசோதித்தபிறகு, பயப்படும்படி எதுவும் இல்லை என்று மருத்துவர்கள் கூறியிருக்கிறார். தீவிர சிகிச்சைப் பிரிவில் இருப்பதால் அவரை சந்திக்க முடியவில்லை என்று அன்புமணி தெரிவித்துள்ளார்.
ராமதாஸ் - அன்புமணி இடையே கடந்த நில மாதங்களாக மோதல் போக்கு நீடித்து வருகிறது. இந்த நிலையில் ராமதாஸ் உடல்நலம் குறித்து அன்புமணி நலம் விசாரிக்க சென்றது முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.