மதுரை, கோவை மெட்ரோ திட்டம் நிராகரிப்பு... தமிழக அரசு செய்த தவறு என்ன?

Narayanan Thirupathi
நாராயணன் திருப்பதி
Published on

மதுரை, கோவை மெட்ரோ திட்டம் நிராகரிக்கப்பட்டதற்கு தமிழ்நாடு அரசே காரணம் என பாஜக செய்தி தொடர்பாளர் நாராயணன் திருப்பதி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “கோவை மற்றும் மதுரை மெட்ரோ திட்டங்களை மத்திய அரசு நிராகரித்து விட்டது என்றும், இது மத்திய அரசின் கீழ்மையான பழிவாங்கும் போக்கு என்றும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அறிக்கை விட்டிருப்பது கடும் கண்டனத்திற்குரியது. உண்மைக்கு புறம்பான தகவல்களை அளித்திருப்பது ஒரு பொறுப்பான முதலமைச்சருக்கு அழகல்ல.

அவரின் அறிக்கையில் பாஜக ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்கு கூட மெட்ரோ ரயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு. எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை புறக்கணிப்பது அழகல்ல என்று கூறியிருப்பது அவரின் அறியாமையை காட்டுகிறது அல்லது அவரின் உள்நோக்கத்தை வெளிப்படுத்துகிறது.

நகரங்கள் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் (Urban Agglomeration) 20 லட்சம் பேருக்கும் குறைவான மக்கள் தொகைக்கு கீழே உள்ள நகரங்களுக்கு எந்த மாநிலத்திலும் மெட்ரோ ரயில் திட்டத்திற்கான அனுமதியை மத்திய அரசு வழங்கவில்லை என்பது உறுதி. முதல்வர் சொல்வதில் உண்மை இருந்தால் அவர் புள்ளி விவரங்களோடு குறிபிட்டு சொல்வது தான் அவர் வகிக்கும் பதவிக்கு பெருமை சேர்க்கும். அதை விடுத்து, 'வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ' என்று பேசுவது உள்நோக்கம் கொண்ட மலிவு அரசியலே!

போபால் (23 லட்சம்), கான்பூர் (29.3 லட்சம்), நாக்பூர்(25.5 லட்சம்), இந்தூர் (22 லட்சம் ) மற்றும் சூரத் (73.3 லட்சம்) போன்ற நகரங்கள் மற்றும் அதை சார்ந்த புறநகர்களின் (Urban Agglomeration) மக்கள் தொகை எண்ணிக்கை 20 லட்சத்திற்கும் அதிகமானவையே என்பதும் அவற்றின் புள்ளி விவரங்களை அந்தந்த மாநிலங்கள் தங்களின் விரிவான திட்ட அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தன என்பதும் தெரியாமலேயே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது துரதிர்ஷ்டவசமானது. ஆனால், மதுரை மற்றும் கோவை மெட்ரோ திட்டங்களில் விரிவான திட்ட அறிக்கையில் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையிலான எண்ணிக்கையையே தமிழக அரசு குறிப்பிட்டுள்ளது. அதனடிப்படையில், மெட்ரோ திட்டங்களுக்கான கொள்கை அளவுகோலின் படி 20 லட்சத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட நகரங்கள் என கோவை மற்றும் மதுரை குறித்த தரவுகளை மத்திய அரசுக்கு அளித்து விண்ணப்பத்திருந்த நிலையில், ஒருங்கிணைந்த நகரம் மற்றும் புறநகர் மக்கள் தொகையை குறிப்பிடத் தவறியது தமிழக மாநில அரசின் தவறு தானே? மற்ற மாநிலங்கள் அனைத்தும் முறையாக, தெளிவாக தங்களின் நகரங்கள் மற்றும் அதை சார்ந்த புறநகர்களின் (Urban Agglomeration) குறித்த விவரங்களை விரிவான திட்ட அறிக்கையில் குறிப்பிடும் போது, தமிழ்நாடு அரசு அதை கோட்டை விட்டது ஏன்? மெட்ரோ திட்டங்களை நிறைவேற்ற தமிழக அரசு சுணக்கம் காண்பிப்பது ஏன் என்ற சந்தேகம் எழுகிறது.

இப்படி தவறுகள் நம் மாநில அரசின் மீது இருக்க, மத்திய அரசை குறை கூறுவது கூட்டாட்சி கருத்தியலை சிதைக்கும் முயற்சியில் ஈடுபடுவது திராவிட மாடல் அரசு தான் என்பதை படம் பிடித்துக் காட்டுகிறது. உடனடியாக கோவை மற்றும் மதுரை நகரங்களின் புறநகர்களோடு ஒருங்கிணைந்த மக்கள் தொகை எண்ணிக்கையை மத்திய அரசுக்கு விளக்கி குறிப்பிட்டு கோவை மற்றும் மதுரை நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டத்தை கொண்டு வர முயற்சி எடுக்க வேண்டிய பொறுப்பும், கடமையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தான் உள்ளது. அதை விடுத்து மாநில அரசின் தவறால் ஏற்பட்ட தாமதத்திற்கு மத்திய அரசின் மீது பழி போட்டு தப்பித்து விடலாம் என்று முதலமைச்சர் நினைக்கக் கூடாது. இனியாவது திராவிட மாடல் அரசியல் என்ற தற்பெருமை பேசாது தமிழர்களின் நலன் குறித்து சிந்திக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Andhimazhai
www.andhimazhai.com