எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு
எடப்பாடி பழனிசாமி செய்தியாளர் சந்திப்பு

இஸ்லாமிய கைதிகள் விவகாரம் : பேரவையில் காரசாரம், அ.தி.மு.க. வெளிநடப்பு!

இசுலாமிய கைதிகளை விடுவிப்பது தொடர்பான கவன ஈர்ப்புத் தீர்மானத்தின் மீது பேச வாய்ப்பு அளிக்கவில்லை என்று கூறி சட்டப்பேரவையிலிருந்து அ.தி.மு.க. உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் நேற்று தொடங்கி நடைபெற்று வருகிறது. இன்று கேள்வி நேரம் முடிந்தபிறகு, நீண்ட காலமாக சிறையில் இருக்கும் இஸ்லாமிய சிறைவாசிகளை விடுவிக்க வேண்டும் எனக்கோரி காங்கிரஸ், பா.ம.க., ம.ம.க. உறுப்பினர்கள் கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தனர்.

அப்போது, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இடையே காரசார விவாதம் நடைபெற்றது.

முதலமைச்சர் ஸ்டாலின் பேசுகையில், “ இஸ்லாமிய கைதிகள் யாருமே விடுதலை செய்யப்படவில்லை; அதற்கான முயற்சிகள் எடுக்கப்படவில்லை” என்ற தோற்றத்தைச் சிலர் ஏற்படுத்தப் பார்க்கிறார்கள். இந்த விஷயத்தில் சட்டரீதியான முறைப்படி தமிழ்நாடு அரசு உரிய வகையில் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. எதிர்க்கட்சித் தலைவர் மிகுந்த அக்கறையோடு இந்தப் பிரச்சினை குறித்து எடுத்துப் பேசினார். இன்றைக்கு இஸ்லாமிய சிறைவாசிகள் முன்விடுதலை பற்றி அ.தி.மு.க. பேசுவதால், நான் அவர்களைப் பார்த்து ஒன்றைக் கேட்க விரும்புகிறேன். நீங்கள் 10 ஆண்டுகாலம் ஆட்சியில் இருந்தபோது இந்த விஷயத்தில் கண்ணை மூடிக்கொண்டு இருந்ததற்கு என்ன காரணம்?” எனக் கேட்டார்.

”ஆட்சியில் இருந்தபோது இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலை பற்றி துளியும் நடவடிக்கை எடுக்காதது மட்டுமல்ல; குடியுரிமை திருத்தச் சட்டம், தேசிய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு எல்லாவற்றையும் கண்ணைமூடி ஆதரித்த அ.தி.மு.க., இப்போது இசுலாமிய சிறைவாசிகள் மீது காட்டக்கூடிய திடீர்ப் பாசம் ஏன் என்று இங்கு இருக்கக்கூடிய அனைவருக்கும் தெரியும்; எங்களுக்கும் தெரியும். அதைவிட சிறுபான்மை சகோதரர்களுக்கு மிக நன்றாகவே தெரியும்.” என்றும் முதலமைச்சர் கூறினார்.

அவருடைய கருத்துக்கு பதில் அளிக்க தங்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டதால், அவையிலிருந்து வெளிநடப்பு செய்ததாக எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com