மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்
மனிதநேய ஜனநாயக கட்சி நடத்திய ஆர்ப்பாட்டம்

“எழுவர் விடுதலை போல செய்யுங்கள்” - சட்டமன்ற முற்றுகைப் போராட்டம்!

எழுவர் விடுதலை போல ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் இன்று சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெற்றது.

இது தொடர்பாக மனிதநேய ஜனநாயக கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது: “சாதி, மத, வழக்கு பேதமின்றி 20 ஆண்டுகளைக் கடந்த ஆயுள் சிறைவாசிகளை விடுதலை செய்ய வேண்டும் என மனிதநேய ஜனநாயக கட்சி தொடர்ந்து போராடி வருகிறது.

இந்நிலையில் நடப்பு சட்டமன்ற கூட்டத்தொடரில் பா.ஜ.க.வை தவிர அனைத்து கட்சிகளையும் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேச வைத்து இதை மக்கள் மையப்படுத்தியுள்ளது.ஆனால் தமிழக முதல்வர் கவன ஈர்ப்பு தீர்மானத்தில் பேசும்போது, ஆளுநரின் ஒப்புதலுக்கு இதை அனுப்பிக் காத்திருப்பதாக கூறியிருப்பது அதிர்ச்சியளித்துள்ளது.

பேரறிவாளன், ரவிச்சந்திரன் உள்ளிட்ட 7 தமிழர் விடுதலையில் 161 வது பிரிவின்படி அமைச்சரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது போன்று இவர்கள் விஷயத்திலும் செய்ய வேண்டும் என்ற கோரிக்கை வலுத்துள்ளது.

இக்கோரிக்கையை வலியுறுத்தியும், உச்சநீதிமன்றத்தில் இவர்களது ஜாமீனுக்கு எதிராக வாதிட்ட தமிழக அரசின் நிலைப்பாட்டுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இன்று மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் சட்டமன்ற முற்றுகை போராட்டம் நடைபெற்றது.” இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த போராட்டத்தில், மே 17, எஸ்.டி.பி.ஐ., இந்திய தேசிய லீக், விடுதலை தமிழ் புலிகள் உட்பட பல்வேறு கட்சியின் தலைவர்கள் கலந்து கொண்டனர்.

logo
Andhimazhai
www.andhimazhai.com