நிதியை விடுவிக்கவும்.. மத்திய அரசுக்கு நிதியமைச்சர் வலியுறுத்தல்!

அமைச்சர் தங்கம்தென்னரசு
அமைச்சர் தங்கம்தென்னரசு
Published on

தமிழ்நாட்டுக்கான ரூ18,500 கோடியை மத்திய அரசு விடுவிக்க வேண்டும் என்று தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தி உள்ளார்.

டெல்லியில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் மாநில நிதி அமைச்சர்களுடனான மத்திய அரசின் நிதிநிலை அறிக்கைக்கான முன்னோடி ஆலோசனைக் கூட்டடம் நேற்று ஜனவரி 10-ந் தேதி நடைபெற்றது. இதில் அமைச்சர் தங்கம் தென்னரசு, நிதித்துறை அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் உதயச்சந்திரன், இணைச் செயலாளர் பிரத்திக் தயாள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இக்கூட்டத்தில் அமைச்சர் தங்கம் தென்னரசு முன்வைத்த கோரிக்கைகள்:

• சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் 2-ஆம் கட்டப் பணிகளுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும்.

• மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்க வேண்டும்.

• தமிழ்நாட்டின் மொத்த ஏற்றுமதி வர்த்தகத்தில் 31%அமெரிக்காவுடன் நடைபெறுகிறது. அமெரிக்காவின் வரி உயர்வு மற்ற மாநிலங்களை விட தமிழ்நாட்டை அதிகமாக பாதிக்கிறது. இதை தேசிய சவாலாகக் கருத வேண்டும்.

• சரக்கு மற்றும் சேவை வரி (GST) விகித சீரமைப்பால் தமிழ்நாட்டுக்கு மட்டும் ரூ.10,000 கோடி வருவாய் இழப்பு ஏற்படும். இதனை ஈடு செய்ய இழப்பீட்டு முறையை அறிமுகப்படுத்த வேண்டும்.

• தீங்கு விளைவிக்கும் பொருட்கள் மீது மத்திய அரசு விதிக்கும் ஆயத்தீர்வை உயர்த்தும்போது, அதனால் கிடைக்கும் கூடுதல் வருவாய் முழுமையாக மத்திய அரசுக்கே செல்கிறது. இதில் மாநிலங்களுக்கான உரிய பங்கை உறுதி செய்ய வேண்டும்.

• ஜல் ஜீவன் இயக்கத்துக்கான மத்திய அரசின் பங்கு ரூ.3,112 கோடி உடனடியாக விடுவிக்க வேண்டும்.

• தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் புளோரோசிஸ் பிரச்சினைக்கு தீர்வு காணும் ஒகேனக்கல் குடிநீர் திட்டத்தின் 3-ஆம் கட்டப் பணிகளுக்கான ரூ.8,428 கோடி மதிப்பிலான திட்டத்திற்கு மத்திய அரசின் பங்குத் தொகையான ரூ.2,283 கோடி வழங்க ஒப்புதல் தர வேண்டும்.

• 2024-25 மற்றும் 2025-26 ஆண்டுகளுக்கான ஒருங்கிணைந்த கல்வித் திட்டத்தின் கீழ் மத்திய அரசு ஒப்புதல் அளித்த ரூ.3,548 கோடி இன்னும் விடுவிக்கப்படவில்லை.

• பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின் (ஊரகம் மற்றும் நகர்ப்புறம்) கீழ் மத்திய அரசு 75 சதவீத பங்களிப்பு வழங்குவது குறித்து பரிசீலிக்க வேண்டும்.

• திருப்பத்தூர்–கிருஷ்ணகிரி–ஓசூர் புதிய ரயில் பாதை

• மதுரை–தூத்துக்குடி வழியாக அருப்புக்கோட்டை ரயில் பாதை

• மீஞ்சூர்–திருவள்ளூர்–ஸ்ரீபெரும்புதூர்–ஒரகடம்–சிங்கப்பெருமாள் கோவில்–மதுராந்தகம் ரயில் பாதை

• சென்னை–சேலம்–கோவை நகரங்களை இணைக்கும் மிதவேக ரயில் பாதை திட்டங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் தங்கம் தென்னரசு வலியுறுத்தினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com