
தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டுள்ளார்.
சென்னை சேத்துப்பட்டில் உள்ள ஆர்எஸ்எஸ் அலுவலகத்தில் ஆர்எஸ்எஸ் - பாஜக நிர்வாகிகளின் கூட்டுக் கூட்டம் பாஜக தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் தலைமையில் நடந்தது.
இதில் தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்த கூட்டத்தில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகத்தை விடுவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்று வெளியாகும் என எதிரபார்க்கப்படுகிறது.
அண்ணாமலை உள்ளிட்டோர் கேசவ விநாயகத்தை மாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தியதாகவும், புகார்கள் காரணமாகவும் இந்த முடிவு எடுக்கப்பட்ட தாக கூறப்படுகிறது.
சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறும் நிலையில் தமிழக பாஜக அமைப்பு பொதுச்செயலாளர் பொறுப்பில் இருந்து கேசவ விநாயகம் விடுவிக்கப்பட்டிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தில் பணியாற்றிய கேசவ விநாயகம், கடந்த 2015ஆம் ஆண்டு தமிழக பாஜகவின் அமைப்பு பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். தமிழக பாஜகவில் அதிகார மையமாகவும் கேசவ விநாயகம் இருந்து வந்தார்.
இந்த நிலையில், அவரின் பதவி பறிக்கப்பட்டது குறித்து செய்தியாளர்கள் கேள்வி கேட்ட போது, “தாம் ஒரு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்; மாற்றம் இயல்பானது” என கூறினார்.