இலங்கையிலிருந்து விமானத்தில் மதுரைக்கு வந்த அந்நாட்டு வியாபாரிகளை சுங்கத்துறையினர் சரமாரியாகத் தாக்கினர் என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
தமிழகத்திலிருந்து துணி வகைகளை கொள்முதல் செய்து, இலங்கைக்குக் கொண்டுசென்று விற்பனை செய்வதில் அந்த நாட்டு வியாபாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்களும் இவர்களுடன் சேர்ந்து தொழில் செய்வது வழக்கம். இலங்கைக்குச் சென்று அங்கிருந்து சிங்கப்பூர், பாங்காக் ஆகிய இடங்களுக்கும் சென்று துணி வியாபாரம் செய்வார்கள்.
இப்படி வியாபாரத்தை முடித்துவிட்டு நேற்று கொழும்பு வழியாக மதுரைக்கு வந்திறங்கிய மூன்று இலங்கை வியாபாரிகளை, சுங்கத்துறையினர் தாக்கியுள்ளனர். அவர்களுடன் சேர்ந்து தாக்கப்பட்ட செல்வக்குமார் ஊடகத்தினரிடம் இந்தத் தகவலைத் தெரிவித்தார். சுங்கத்துறையினர் தனியாக அழைத்துச்சென்று தங்களை தடிகளால் தாக்கியதாகவும் அவர் கூறினார்.
அவர் குறிப்பிடும் மூன்று இலங்கையர்களுக்கும் காயம் ஏற்பட்டதை ஊடகத்தினர் பார்க்கமுடிந்தது. தங்களை ஏன் தாக்கினார்கள் என்பதுகூடத் தெரியவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் வேதனையுடன் கூறினார்கள்.