தென்காசிக்கு 2 சோதனைகள்- அமைச்சர் அருண்ராஜ் சொன்னது என்ன?

அமைச்சர் அருண்ராஜ்
அமைச்சர் அருண்ராஜ்
Published on: 

என்று அமைச்சர் டெங்கு காய்ச்சலைத் தவிர்க்கும் பொருட்டு டெங்கு தடுப்பூசி,  பல்வேறு வகையான கொசு விரட்டிகளைப்  பயன்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சி நாட்டிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தென்காசி மாவட்டம், கடையநல்லூர் பகுதியில் மேற்கொள்ளப்படவுள்ளது.

நேற்று முந்தினம் கடையநல்லூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில், தேசிய பரவுநோயியல் நிறுவனத்தின் பிரதிநிதிகளிடம் கள ஆராய்ச்சிக்கான முன் ஒப்புதல் கடிதத்தை நல்வாழ்வுத் துறை அமைச்சர் அருண்ராஜ் வழங்கினார்.

”டெங்கு காய்ச்சலுக்கு என்று தனியாக ஒரு மருந்து இன்றுவரை இல்லை. ஆகவே, டெங்குவுக்கு எதிரான போரில் தடுப்புதான் நமது முதல் ஆயுதம். தடுப்புதான் நமது கடைசி ஆயுதமும் கூட. கொசுவை ஒழிப்பது, கொசுக்கடியிலிருந்து தப்பிப்பது, காய்ச்சலை ஆரம்பத்திலேயே கண்டறிந்து சிகிச்சை அளிப்பது, இந்த மூன்று ஆயுதங்களைக் கொண்டே பல ஆண்டுகளாக நாம் போராடி வருகிறோம்.

நாட்டிலேயே முதன்முதலில் பொது சுகாதாரச் சட்டத்தை இயற்றிய மாநிலம் தமிழ்நாடு. பொது சுகாதாரத்தில் புதிய பாதைகளை முதலில் போட்டுக் காட்டுவது தமிழ்நாட்டின் வழக்கம். அந்த வழக்கத்தை இன்று கடையநல்லூரிலிருந்து தொடர்கிறோம்.

டெங்கு தடுப்பூசி — நாட்டிலேயே முதல் முன்னோடி ஆய்வு

பல ஆண்டுகளாக மூன்றே ஆயுதங்களுடன் போராடிய நமக்கு, அறிவியல் இன்று நான்காவது ஆயுதத்தைக் கையில் கொடுத்திருக்கிறது. அதுதான் டெங்கு தடுப்பூசி.

ஜப்பான் நாட்டின் தகேடா (Takeda) நிறுவனம் உருவாக்கிய 'கியூடெங்கா' (Qdenga) என்ற இந்த தடுப்பூசி, டெங்கு வைரஸின் நான்கு வகைகளுக்கும் எதிராகப் பாதுகாப்பு அளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. மூன்று மாத இடைவெளியில் இரண்டு தவணைகள் போதும். முன்பு டெங்கு வந்ததா என்று இரத்தப் பரிசோதனை செய்த பிறகுதான் போட வேண்டும் என்ற தேவையும் இல்லை.

ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து, இந்தோனேசியா, தாய்லாந்து உள்ளிட்ட நாற்பதுக்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த தடுப்பூசி அனுமதி பெற்றுள்ளது. உலக சுகாதார நிறுவனம் இதற்கு முன்தகுதிச் சான்று (Prequalification) வழங்கி, டெங்கு அதிகம் பரவும் பகுதிகளில் 6 முதல் 16 வயது வரையிலான குழந்தைகளுக்குப் பரிந்துரைத்துள்ளது. பிரேசில் நாடு, உலகிலேயே முதன்முறையாக இதைத் தனது தேசிய தடுப்பூசித் திட்டத்தில் சேர்த்துள்ளது. உலகெங்கும் இதுவரை இரண்டு கோடிக்கும் மேற்பட்ட தவணைகள் வழங்கப்பட்டுள்ளன.

பெரிய சர்வதேச மருத்துவ ஆய்வுகளில், இரண்டு தவணைகளும் பெற்றவர்களுக்கு டெங்கு காய்ச்சலிலிருந்து சுமார் 80 சதவீதமும், மருத்துவமனையில் சேர்க்க வேண்டிய அளவுக்குக் கடுமையான பாதிப்பிலிருந்து சுமார் 90 சதவீதமும் பாதுகாப்பு கிடைத்தது. இந்தியாவில் நடத்தப்பட்ட மருத்துவ ஆய்வுகளிலும் இதன் பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டது. அதன் அடிப்படையில், இந்த ஆண்டு ஜூலை மாதம், மத்திய மருந்து தரக் கட்டுப்பாட்டு அமைப்பு (CDSCO) 4 முதல் 60 வயது வரை உள்ளவர்களுக்கு இந்த தடுப்பூசியைப் பயன்படுத்த அனுமதி வழங்கியது. இந்தியாவில் அனுமதி பெற்ற முதல் டெங்கு தடுப்பூசி இதுவே.

இந்தியச் சூழலில் நான்கு வகை டெங்கு வைரஸ்களும் ஒரே நேரத்தில் பரவுகின்றன. நமது ஆரம்ப சுகாதார நிலையங்கள் வழியாக இதை எப்படி வழங்குவது? மூன்று மாதங்கள் கழித்து இரண்டாவது தவணைக்கு மக்களை எப்படித் திரும்ப அழைத்து வருவது? மக்கள் இதை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்கிறார்கள்? நமது மக்களிடையே இதன் பாதுகாப்பும் பயனும் எவ்வாறு உள்ளன? இந்தக் கேள்விகளுக்கு இந்திய மண்ணிலிருந்தே பதில் தேவை. அதனால்தான், இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு இதன் பாதுகாப்பு மற்றும் செயல்திறன் குறித்து ஆய்வு நடத்தப்பட வேண்டும் என்று மருந்து கட்டுப்பாட்டு அமைப்பே நிபந்தனை விதித்துள்ளது.

அந்தப் பதிலைத் தேட யாரோ முன்வருவார்கள் என்று காத்திருக்காமல், தமிழ்நாடு முதலில் முன்வருகிறது. சென்னையில் உள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகத்தின் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்துடன் (ICMR–NIE) இணைந்து, தமிழ்நாடு பொது சுகாதாரத் துறை, டெங்கு தடுப்பூசியை அறிமுகப்படுத்துவது குறித்த நாட்டின் முதல் முன்னோடி ஆய்வை இங்கே கடையநல்லூரில் மேற்கொள்ளவுள்ளது.

கோவிட் காலத்தில் கோடிக்கணக்கான தடுப்பூசிகளைத் திறம்பட வழங்கிய அனுபவம் நமது துறைக்கு உண்டு. அந்த அனுபவத்தின் பலம், இந்த ஆய்வுக்குப் பின்னால் நிற்கிறது. இந்த ஆய்வில் என்ன நடக்கும் என்பதைக் கடையநல்லூர் மக்களுக்கு நான் தெளிவாகச் சொல்ல விரும்புகிறேன்.

முதலாவதாக — இது புதிய மருந்தைச் சோதித்துப் பார்க்கும் பரிசோதனை அல்ல. உலகெங்கும் லட்சக்கணக்கானோர் ஏற்கெனவே பெற்றுள்ள, இந்திய அரசின் அனுமதி பெற்ற தடுப்பூசியே இங்கு வழங்கப்படும். நமது மக்களுக்கு இது எந்த அளவுக்குப் பாதுகாப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது, இதை எப்படிச் சிறப்பாகக் கொண்டு சேர்ப்பது — இதுவே ஆய்வு.

இரண்டாவதாக — இது முழுக்க முழுக்கத் தன்னார்வ அடிப்படையிலானது. தகுதியான ஒவ்வொருவருக்கும் முழு விளக்கம் அளிக்கப்பட்டு, அவர்களின் எழுத்துப்பூர்வ சம்மதத்துடன் மட்டுமே தடுப்பூசி வழங்கப்படும். யாரும் கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள்.

மூன்றாவதாக — ஒப்புதல் பெற்ற ஆய்வு நெறிமுறை, நெறிமுறைக் குழுவின் அனுமதி, தேசிய வழிகாட்டுதல்கள் — இவற்றுக்கு உட்பட்டே ஒவ்வொரு படியும் நடக்கும்.

நான்காவதாக — தடுப்பூசி பெறும் ஒவ்வொருவரும் தொடர்ந்து கண்காணிக்கப்படுவார்கள்.

ஐந்தாவதாக — ஆய்வின் முடிவுகள், தடுப்பூசி குறித்த தேசிய தொழில்நுட்ப ஆலோசனைக் குழு (NTAGI) உள்ளிட்ட அறிவியல் மற்றும் தொழில்நுட்பக் குழுக்களுக்குச் சமர்ப்பிக்கப்படும். தமிழ்நாடு முழுவதும் விரிவுபடுத்துவது குறித்த முடிவு, அந்தப் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே எடுக்கப்படும்.

கடையநல்லூர் மக்கள் இன்று உருவாக்கப் போகும் சான்றுகள், நாளை தமிழ்நாட்டின் ஏழரை கோடிக்கும் மேற்பட்ட மக்களுக்கும், இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் வழிகாட்டும். நமது சொந்த விஞ்ஞானிகள் உருவாக்கி வரும் இந்திய டெங்கு தடுப்பூசிகளும் இறுதிக்கட்ட ஆய்வில் உள்ளன. அவை வரும்போது, அவற்றை மக்களிடம் எப்படிக் கொண்டு சேர்ப்பது என்ற பாடத்தையும் இந்த ஆய்வு நமக்குக் கற்றுத் தரும்.

கொசு விரட்டிகள் குறித்த செயலாக்க ஆராய்ச்சி

டெங்குவை எதிர்த்து நாம் ஏற்கெனவே செய்து வரும் பணிகள் — வீடுகளிலும் பொது இடங்களிலும் தேங்கும் நீரை அகற்றுதல், கொசுப்புழு ஒழிப்பு, தேவையான இடங்களில் புகைமருந்து தெளித்தல், காய்ச்சல் கண்காணிப்பு, உரிய நேரத்தில் சிகிச்சை — இவை தொடரும். ஆனால், இவற்றுடன் கூடுதலாக எதைச் சேர்த்தால் டெங்கு பாதிப்பு இன்னும் குறையும் என்பதை ஊகத்தின் அடிப்படையில் அல்ல, அறிவியலின் அடிப்படையில் நாம் முடிவு செய்ய வேண்டும்.

தோலில் பூசும் கொசு விரட்டும் கிரீம்கள், மின்சாரத் திரவக் கொசு விரட்டிகள் — இவை கொசுக்கடியிலிருந்து கூடுதல் தனிநபர் பாதுகாப்பை அளிக்கக்கூடும். ஆனால், இவற்றை வழக்கமான தடுப்பு நடவடிக்கைகளுடன் இணைத்துப் பயன்படுத்தும்போது, ஆய்வகப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்ட டெங்கு தொற்று உண்மையிலேயே குறைகிறதா? இவை எந்த அளவுக்குப் பாதுகாப்பானவை? ஒவ்வாமை போன்ற பக்கவிளைவுகள் உண்டா? மக்கள் இவற்றை ஏற்றுத் தொடர்ந்து பயன்படுத்துவார்களா? இந்தக் கேள்விகளுக்கு நடைமுறைச் சூழலில் பதில் காண வேண்டும்.

தமிழ்நாடு சட்டமன்றத்தில் 08.09.2026 அன்று வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையில், கடையநல்லூர் நகராட்சியின் 33 நகர்ப்புற வார்டுகளில் இந்த ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. இந்த ஆய்வில் கொசு விரட்டிகள் பயனுள்ளவை என்று நிரூபணமானால், அவற்றைத் தமிழ்நாடு முழுவதும் டெங்கு தடுப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக விரிவுபடுத்துவது குறித்து அரசு பரிசீலிக்கும். ” என்று அமைச்சர் அருண்ராஜ் கூறினார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com