தமிழ்நாடு காவல்துறை
தமிழ்நாடு காவல்துறை

ஓய்வுபெற்ற 70 டி.ஜி.பி.களுக்கு வேலையாள் - அரசுக்கு ரூ.84 இலட்சம் புதுச் செலவு!

ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநர்களும் அரசின் செலவில் வீட்டுப் பணியாளர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம், தமிழக அரசுக்கு ஆண்டுக்கு ரூ.84 லட்சம் கூடுதலாக செலவாகும்.

தமிழ்நாட்டில் பணியிலிருக்கும் ஐ.ஏ.எஸ். போன்ற அகில இந்திய சேவைப் பணி அதிகாரிகளுக்கு வீட்டில் இரண்டு பணியாளர்களை அமர்த்திக்கொள்ள அனுமதி வழங்கப்படுகிறது. அவர்கள் அரசுத் துறை ஊழியர்களாக இருப்பார்கள்.

தங்கள் பணி ஓய்வுக்குப் பிறகும், தமிழகத்தில், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், கூடுதல் தலைமைச் செயலாளர்கள் ஆகியோர் பொதுப்பணித் துறையின் மூலமோ அல்லது என்.எம்.ஆர். எனப்படும் தற்காலிக அடிப்படையிலோ வேலையாள் ஒருவரை அமர்த்திக்கொள்ளவும் அவர்களுக்கு மாதம் 10ஆயிரம் ரூபாய் அரசின் மூலம் சம்பளம் கொடுக்கவும் அரசு ஒப்புக்கொண்டது.

நான்கு ஆண்டுகளாக அவர்கள் அனுபவித்துவரும் இந்த சலுகையைப் போலவே, தங்களுக்கும் வழங்கவேண்டும் என ஓய்வுபெற்ற காவல்துறை தலைமை இயக்குநர்கள் சார்பில் அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டது.

மாநிலத்தில் ஓய்வுபெற்ற டி.ஜி.பி.கள். சுமார் 70 பேர் உள்ள நிலையில், அவர்களின் கோரிக்கையை அரசு ஏற்றுக்கொண்டுள்ளது.

இதனால் தமிழக அரசுக்கு ஆண்டுக்கு 84 இலட்சம் ரூபாய் செலவாகும்.

ஐ.ஏ.எஸ். அதிகாரிகளுக்கு பொதுப்பணித் துறை மூலம் வேலையாளை நியமிப்பதற்குப் பதிலாக, தங்களுக்கு தமிழ்நாடு காவலர் வீட்டுவசதிக் கழகத்தின் மூலம் ஆளெடுக்கவும் ஓய்வுபெற்ற டி.ஜி.பி.கள் கோரிக்கை விடுத்திருந்தனர். அதுவும் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

ஒருவேளை, இந்த முன்னாள் டி.ஜி.பி.கள். எந்த ஓர் அரசுத் துறையிலும் அல்லது சட்டப்பூர்வ ஆணையத்திலும் மீண்டும் பணியமர்த்தப்பட்டால், இந்த வேலையாளுக்கான ஊதியத்தை அந்த துறை அல்லது நிறுவனத்திடம் கோர வேண்டும்.

இப்படியான சலுகை, உயர்நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதிகளுக்கும் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Andhimazhai
www.andhimazhai.com