நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.
நாராயணன் திருப்பதி, பா.ஜ.க.

பழிக்குப்பழியா…? காவல் துறை - போக்குவரத்து துறை மோதலைத் தீர்க்கவேண்டும்- பா.ஜ.க.

“காவலர்களுக்கும், போக்குவரத்துத் துறையினருக்குமான பிரச்னை பெரும் மோதலாக உருவெடுக்காமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும்” என்று பா.ஜ.க துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி அறிவுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு:

“சாலை விதிகளை மீறியதாக தமிழக அரசு பேருந்துகளுக்கு அபராதம் விதிக்கிறார்கள் போக்குவரத்துக் காவல்துறையினர் என்ற ஒரு செய்தியைப் பார்க்க, படிக்க நேர்ந்தது. மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்துக்கொண்டிருந்த, ஏங்கிக்கொண்டிருந்த நடவடிக்கையை தாமதமாக எடுத்துள்ளது காவல்துறை. ஒட்டுமொத்த சாலைகளும் தங்களுக்குதான் சொந்தம் என்பது போல போக்குவரத்து விதிகளை மதிக்காமல் செயல்பட்டுக்கொண்டிருந்தனர் பெரும்பாலான அரசுப் போக்குவரத்து ஓட்டுநர்கள். தாங்கள் அரசுப் பேருந்துகளின் ஓட்டுநர்கள் என்ற எண்ணத்தினால், தங்களை எதுவும் செய்துவிட முடியாது என்ற அலட்சியத்தினால், கட்சி சார்ந்த ஊழியர் சங்கங்களின் ஆதரவினால் அசைக்க முடியாதவர்களாக வலம் வந்து கொண்டிருந்தனர்.

கடந்த செவ்வாய்க்கிழைமையன்று தூத்துக்குடிக்குச் சென்ற பேருந்தில் காவலர் ஒருவரை சட்டப்படி பயணச்சீட்டு எடுக்க வேண்டும் என்று கூறி நடத்துநர் வற்புறுத்திய விவகாரத்தில், அந்த காவலர் மீது துறை சார்ந்த நடவடிக்கை எடுக்க தமிழ்நாடு போக்குவரத்துத் துறை பரிந்துரை செய்துள்ள நிலையில், போக்குவரத்து விதிகளை மீறும் அரசு ஓட்டுநர்களின் மீதான காவல்துறையின் நடவடிக்கை தொடங்கியுள்ளது. போக்குவரத்துத் துறையோ அல்லது காவல்துறையோ யாராக இருந்தாலும் சட்டத்திற்கு உட்பட்டு நடக்க வேண்டிய கடமையும், பொறுப்பும் உள்ளது என்பதை அரசு பணியாளர்கள் உணர வேண்டிய அதே நேரத்தில், இது நாள் வரை இதே போன்ற அரசுப் பேருந்துகளின் விதிமீறல்களின் மீது காவல்துறை எவ்வளவு நடவடிக்கை எடுத்தது என்பதையும் அப்படி இல்லையெனில் ஏன் எடுக்கவில்லை என்பதையும் காவல்துறை தெளிவுபடுத்த வேண்டும் .

எது எப்படியோ, சட்டத்தை அமல்படுத்த வேண்டியவர்கள் முறையாக நடந்துகொள்ள வேண்டும். அதே நேரத்தில் இது காவலர்களுக்கும், போக்குவரத்துத் துறையினருக்குமான பெரும் மோதலாக உருவெடுக்காமல் தமிழக அரசு பார்த்துக்கொள்ள வேண்டும். இல்லையேல் அதனால் உருவாகும் பாதிப்புகள் பொது மக்களுக்குத்தான் என்பதை மறுப்பதற்கில்லை.” என்று நாராயணன் திருப்பதி கூறியுள்ளார்.

logo
Andhimazhai
www.andhimazhai.com