தமிழ்நாட்டில் கலவரம் செய்தால்தான் பா.ஜ.க. வளரும் என்று பேசிய இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையார் கைது செய்யப்பட்டுள்ளார்.
மக்களவைத் தேர்தலில் நெல்லை தொகுதி பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தோல்வி அடைந்தது தொடர்பாக, இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் உடையாரும், நெல்லை தெற்கு மாவட்ட பா.ஜ.க. தலைவர் தமிழ்ச்செல்வனும் உரையாடிய ஒலிப்பதிவு சமூக ஊடகங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
பா.ஜ.க. வளரவேண்டுமென்றால் தமிழகத்தில் கலவரம் செய்ய வேண்டும் என்று உடையார் சொல்வது அந்த ஒலிப்பதிவில் பதிவாகி இருந்தது.
இந்நிலையில், கலவரத்தைத் தூண்டும்வகையில் ஒலிப்பதிவை வெளியிட்டதாக, உடையார் மீது பாளையங்கோட்டை காவல் உதவி ஆய்வாளர் துரைப்பாண்டி புகார் அளித்தார். அதன்பேரில், மதரீதியான பிரச்சினையைத் தூண்டியது, பொது அமைதியைக் குலைத்தல், அவதூறு பரப்புதல் உட்பட்ட 4 சட்டப்பிரிவுகளின்படி உடையார் மீது வழக்கு பதியப்பட்டது. அதையடுத்து, காவல்துறையினர் அவரை நேற்று கைதுசெய்தனர்.
இதனிடையே, கட்சியிலிருந்து அவர் நீக்கப்பட்டுள்ளதாக கட்சியின் நிறுவனர் அர்ஜுன் சம்பத் அறிவித்துள்ளார்.