பூந்தமல்லி முதல் சுங்குவார்சத்திரம் வரையிலான மெட்ரோ ரயில் திட்டப் பணிகளுக்கு முதல்கட்டமாக ரூ. 2,126 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு இன்று உத்தரவிட்டுள்ளது.
பரந்தூரில் சர்வதேச விமான நிலையம் அமைக்கும் பணிகள் தொடங்கப்பட்டுள்ள நிலையில், பூந்தமல்லி - பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் திட்டத்தை அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் ஆராயப்பட்டது.
இதையடுத்து, பூந்தமல்லியில் இருந்து திருமழிசை, ஸ்ரீபெரும்புதூர் வழியாக பரந்தூர் விமான நிலையம் வரை மொத்தம் 43.63 கி.மீ. தொலைவுக்கு 19 உயர்நிலை மெட்ரோ நிலையங்களுடன் மெட்ரோ பாதை அமைக்க திட்ட அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
இந்த திட்டத்தை இரு கட்டங்களாக செயல்படுத்த பரிந்துரைக்கப்பட்ட நிலையில், முதல்கட்டமாக பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை ரூ. 8,779 கோடி மதிப்பீட்டில் 27.9 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ உயர் மேம்பாலம் அமைக்க தமிழக அரசு ஒப்புதல் வழங்கியிருந்தது.
இந்த நிலையில், பூந்தமல்லி - சுங்குவார்சத்திரம் வரை மெட்ரோ திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்தல் உள்ளிட்ட பணிகளுக்காக முதல்கட்டமாக ரூ. 2,126 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.