பொங்கல் பரிசு தொகுப்புக்கு ரூ. 248 நிதி ஒதுக்கீடு!

மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பைவழங்கும் முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
மக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பைவழங்கும் முதல்வர் ஸ்டாலின் (கோப்புப்படம்)
Published on

தமிழகத்தில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.

தமிழ்நாட்டில் அறுவடைத் திருநாளான பொங்கல் ஆண்டு தோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு மற்றும் ரொக்க பணம் வழங்கப்படுகிறது.

அந்த வகையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு பொறுப்பேற்ற பின்னர் கடந்த 2022ம் ஆண்டு பொங்கலின் போது பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய் உள்ளிட்ட 20 பொருட்கள் அடங்கிய தொகுப்பும், கரும்பும் வழங்கப்பட்டது. இதையடுத்து கடந்த 2023, மற்றும் 2024ம் ஆண்டுகளில் பச்சரிசி, சர்க்கரை, கரும்புடன் தலா ரூ.1000 ரொக்க பணம் வழங்கப்பட்டது. ஆனால் 2025ம் ஆண்டு பொங்கல் பண்டிகையின் போது பச்சரிசி, சர்க்கரை, கரும்பு மட்டும் வழங்கப்பட்டது. ரொக்கம் வழங்கப்படவில்லை.

இந்நிலையில் 2026ம் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு தமிழக அரசு ரூ.248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிட்டுள்ளது. ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை மற்றும் முழு கரும்பு கொள்முதல் செய்ய இந்த தொகை ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் 2026ம் ஆண்டு சட்ட மன்ற தேர்தல் நடைபெற உள்ளதால் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பும் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு பொதுமக்களிடையே எழுந்துள்ளது. முதல்வர் தலைமையில் வரும் ஜனவரி 6ம் தேதி அமைச்சரவை கூட்டம் நடைபெறும் நிலையில் இது குறித்த முக்கிய முடிவு எடுக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

logo
Andhimazhai
www.andhimazhai.com