கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மாதம் தலா ரூ. 5 ஆயிரம் வழங்கப்படும் என்று தவெக நிர்வாகியும், ஜேப்பியர் தொழில்நுட்ப கல்லூரி தலைவருமான மரிய வில்சன் அறிவித்திருந்த நிலையில், இன்று (அக்டோபர் 14) முதல் அதற்கான பணி தொடங்கியுள்ளது.
கடந்த செப்டம்பர் 27ஆம் தேதி கரூரில் தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கலந்துகொண்ட பிரச்சார கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதற்கிடையே உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு இழப்பீடும் வழங்கப்பட்டது. அரசு சார்பில் ரூ.10 லட்சம் வழங்கப்பட்டது. தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் ரூ.20 லட்சம் அறிவித்தார்.
இந்த பணத்தை காசோலையாக வழங்க தமிழக வெற்றிக் கழக தலைமை நடவடிக்கை எடுத்து வருகிறது. வரும் 17ஆம் தேதி கரூர் செல்லவிருக்கும் விஜய், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரிடம் அவரது கையாலேயே வழங்குவார் என தகவல்கள் வருகின்றன.
இந்தநிலையில், தமிழக வெற்றிக் கழக நிர்வாகியும், ஜேப்பியர் தொழில்நுட்ப கல்லூரி தலைவருமான மரிய வில்சன் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு அவர்களது வாழ்நாள் முழுக்க மாதம் தோறும் 5000 ரூபாய் வழங்கப்படும் என்று நேற்று (அக்டோபர் 13) அறிவித்தார்.
இதற்கான ஒரு குழுவை அமைத்து, இந்த குழு நாளை (இன்று) முதல் தனது பணியை தொடங்கும் என்றும் தெரிவித்திருந்தார்.
அதன்படி இக்குழு இன்று கரூருக்கு சென்று உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை சந்தித்து பேசி வருகிறது.
மாதம் தோறும் ரூ.5000 செலுத்துவதற்காக உயிரிழந்தவர்களின் குடும்ப தலைவரின் வங்கிக் கணக்கு எண்ணை பெற்று வருகின்றனர். அதேபோன்று கல்வி, வேலைவாய்ப்பு, மருத்துவம் என எந்த உதவியாக இருந்தாலும் செய்ய தயாராக இருக்கிறோம் என்று கூறி ஆறுதல் தெரிவித்து வருகிறது.