
சென்னையில் அரசுக் குடியிருப்பில் வீடு ஒதுக்குவதில் சாதியப் பாகுபாடு பார்க்கப்படுவதாகவும் அதற்கு சைதாபேட்டை சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினர் துணைபோவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
சமூக ஊடகங்களில் ஏற்கெனவே இதுகுறித்து கடுமையான கண்டனங்கள் எழுந்துள்ள நிலையில்,தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தன் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளது.
”சைதாப்பேட்டை தொகுதி, 169 வட்டத்தில் உள்ள சுப்புபிள்ளை தோட்டம் பகுதியில் குடிசை மாற்று வாரியத்தால் கட்டப்பட்டிருந்த பழைய குடியிருப்புக்கள் இடிக்கப்பட்டு தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் அங்கு சுமார் 450 வீடுகளை உள்ளடக்கிய புதிய அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டப்பட்டன. இந்த வீடுகளுக்கான ஒதுக்கீடு குலுக்கள் முறையில் நடைபெறுவது வழக்கம். ஆனால், சிலர் இங்கு கட்டப்பட்டுள்ள வீடுகளில் "ஏ- பிளாக்"கில் அமைந்துள்ள சுமார் 40 வீடுகளை ஒரு குறிப்பிட்ட சமூகத்தினருக்கு ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுப்பியுள்ளனர். கடந்த ஆட்சி காலத்தில் இவ்வாறான கோரிக்கை எழுந்தபோது குடியிருப்புகளின் தரைத்தளம் முதியோர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்குத்தான் ஒதுக்கப்படும் என்றும் இதர வீடுகள் குலுக்கல் முறையில்தான் ஒதுக்கப்படும் என்றும் தெளிவாக அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தற்போது புதிய அரசு பொறுப்பேற்ற பிறகு மீண்டும் குறிப்பிட்ட சமூகத்திற்கு தனியாக குடியிருப்பை ஒதுக்குவதற்கான கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. இதற்கு இசைவாக ஆளும் கட்சியை சார்ந்த தற்போதைய சைதாப்பேட்டை தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் பிரகாசம் அவர்களும் இருப்பதாக அறியப்படுகிறது. அதிகாரிகள் சிலரும் இதற்கு உடைந்தையாக இருப்பதாக தெரிகிறது. குறிப்பிட்ட சமூகத்தை சார்ந்தவர்களுக்கு குடியிருப்பின் ஒருபகுதியை ஒதுக்குவது இந்திய அரசியலமைப்பு சாசனத்திற்கே எதிரானதாகும். அது சாதிய பாகுபாடுகளை அரசே ஊக்குவிப்பது போல் ஆகிவிடும். கிராமப்புறங்களிலேயே சாதி ரீதியாக குடியிருப்பு இருப்பதை ஏற்றுக்கொள்ள முடியாத நிலையில் சென்னைப் போன்ற பெருநகரில் இது போன்ற கோரிக்கை எழுவதும் அதற்கு இசைவாக சட்டமன்ற உறுப்பினர் இருப்பதாக வரும் தகவல்களும் அதிர்ச்சி அளிக்கிறது.
சாதிய வேறுபாடுகளற்ற சமூகத்தை கட்டமைக்க வேண்டியது நமது பொறுப்பாகும். தமிழ்நாட்டின் பாரம்பரியமான சமூகநீதியை பாதுகாப்பதும் அவசியமாகும். பழமைவாத சிந்தனைகள் மேலோங்கி உள்ள கிராமப்புற பகுதிகளிலேயே அனைத்து சாதியினரும் ஒரே இடத்தில் குடியிருக்கக்கூடிய வகையில் சமத்துவ புரங்களை உருவாக்கிய தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் மையப்பகுதியான சைதாப்பேட்டையில் அரசு கட்டிய குடியிருப்புகளில் சாதிய ரீதியாக இடம் ஒதுக்க வேண்டும் என்று கூறுவதும் அதை ஆதரிக்கக்கூடிய வகையில் சிலர் செயல்படுவதும் கண்டிக்கத்தக்கது. இது சட்டரீதியாக நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டிய விஷயமாகும். அங்குள்ள மக்கள் இது தொடர்பாக தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்து அதற்கான ஒப்புகையையும் பெற்றுள்ளனர்.
எனவே, தமிழ்நாடு அரசும், தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியமும் சைதாப்போட்டை சுப்புபிள்ளை தோட்டத்தில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரிய குடியிருப்புக்களில் உள்ள வீடுகளை குறிப்பிட்ட சில சமூக்த்திற்கு ஒதுக்குவதற்கு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வலியுறுத்துகிறது. எந்தக் குடியிருப்பாக இருந்தாலும் தரைத்தளத்தில் முதியோர்களுக்கும் மாற்றுத்திறனாளிகளுக்கும் ஒதுக்கப்பட வேண்டும். இதர குடியிருப்புகள் அனைத்தும் குலுக்கள் முறையில் எவ்வித பாகுபாடும் இல்லாமல் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை வலியுறுத்துகிறோம். இதற்கு மாறாக செயல்படும் அனைவரது மீதும் வன்கொடுமைத் தடுப்புச்சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.” என்று தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் தென்சென்னை மாவட்டச் செயலாளர் கே. மணிகண்டன், மாவட்டத் தலைவர் ச.லெனின் ஆகியோர் அறிக்கை ஒன்றில் கூறியுள்ளனர்.