
எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணித்து நாளை வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் கிடையாது என தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஜாக்டோ-ஜியோ வேலை நிறுத்தம்
பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும், இடைநிலை ஆசிரியர்கள், முதுகலை ஆசிரியர்கள், உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும். பல்வேறு துறைகளில் 30 சதவீதத்திற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது உள்ளிட்ட உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நாளை (18ஆம் தேதி) ஒருநாள் அடையாள வேலை நிறுத்தம் செய்யப் போவதாக அரசு ஊழியர்களின் ஜாக்டோ-ஜியோ சங்கம் அறிவித்துள்ளது.
SIR பணிகளை புறக்கணிக்கும் வருவாய்த்துறை
எஸ்.ஐ.ஆர். எனப்படும் சிறப்புத் தீவிர வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளை மேற்கொள்ள சொல்வதால் கூடுதல் வேலைப்பளு உள்ளதாக கூறி எஸ்.ஐ.ஆர். பணிகளையும் மேற்கொள்ள மாட்டோம் என வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பு தெரிவித்து இருந்தன. இந்த நிலையில், இந்த நிலையில் அரசு ஊழியர்கள் நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது என்று தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஸ்டிரைக்கில் ஈடுபட்டால் சம்பளம் கிடையாது
எஸ்.ஐ.ஆர். பணிகளை புறக்கணித்து நாளை வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் வழங்கப்பட மாட்டாது என தமிழக அரசின் தலைமைச் செயலாளர் முருகானந்தம் எச்சரிக்கை விடுத்துள்ளார். நாளை மருத்துவ விடுப்பு, தற்செயல் விடுப்பு என எந்த விடுப்பும் எடுக்க அனுமதி கிடையாது. அரசு ஊழியர்கள் அனைவரும் பணியில் இருக்க வேண்டும் என தலைமைச் செயலாளர் முருகானந்தம் வெளியிட்ட சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.