தமிழகத்தில் சேலம் மாவட்டம், கொண்டப்ப நாயக்கன்பட்டியைச் சேர்ந்த அரசு ஊராட்சி ஒன்றியத் தொடக்கப்பள்ளி ஐ.எஸ்.ஓ தரச்சான்றிதழ் பெற்று சாதனை படைத்துள்ளது.
கொண்டப்பநாயக்கன்பட்டி, அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்களின் கல்வித் தேவையை இந்தத் தொடக்கப்பள்ளி பூர்த்திசெய்து வருகிறது.
இதுகுறித்து, பள்ளித் தலைமை ஆசிரியர் அந்தோணி கூறியதாவது :
" வகுப்பறையில் மாணவர்களுக்கு கல்வியைக் கற்பிப்பதில், பல்வேறு புதுமைகளைப் புகுத்திவருகிறோம். இந்தத் தொடக்கப்பள்ளியில் டிஜிட்டல் நூலகம், சிசிடிவி கேமரா போன்ற பல்வேறு வசதிகள் உள்ளன.
மாணவர்களுக்குத் தேவையான குடிநீர், கழிப்பிட வசதி ஆகிய அடிப்படை வசதிகள் சிறப்பாகச் செய்துதரப்பட்டுள்ளது.
புத்தகத்தில் உள்ள பாடங்களைத் தாண்டி, மாணவர்களின் தனித்திறனை ஆசிரியர்கள் கண்டறிந்து ஊக்கப்படுத்தி வருகின்றனர்.
மாணவர்களை விமானப் பயணம் அழைத்துச் செல்லுதல், ஆங்கிலத் திறனை வளர்க்க ஸ்பெல்பீ போட்டி, பொது அறிவுப் போட்டிகள் ஆகியவற்றை நடத்திவருகின்றனர்.
மனப்பாடக் கல்வியாக இல்லாமல், செயல்முறைக் கல்வியாக மாணவர்களுக்கு பாடங்களை இங்குள்ள ஆசிரியர்கள் புகட்டி வருகின்றனர்.
இந்நிலையில், இப்பள்ளியின் முன்னாள் மாணவர் சந்திரசேகர், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழுக்கு விண்ணப்பிக்குமாறு கூறினார். அவருடைய அறிவுறுத்தலின் பேரில், ஐ.எஸ்.ஓ. தரச் சான்றிதழுக்கு விண்ணப்பித்தோம்.
பின்னர், ஐ.எஸ்.ஓ. தரச்சான்றிதழ் தரும் குழுவினர் மூன்று முறை பள்ளிக்கு வந்து ஆய்வுசெய்தனர். பள்ளியில் உள்ள கழிப்பிட வசதிகள், வகுப்பறை இருக்கைகள், குடிநீர் வசதி, வகுப்பறையின் தரம், ஆசிரியர்களின் எண்ணிக்கை, பள்ளித் தூய்மை, சிசிடிவி வசதி ஆகியவற்றை ஆய்வு செய்தனர். ஆய்வுக்குப் பின்னர் எங்கள் பள்ளிக்கு தரச்சான்றிதழ் வழங்கப்பட்டது." என்று தலைமை ஆசிரியர் அந்தோணி கூறினார்.