சாம்சங் நிறுவனத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு அரசு செயல்படுவது தவறு என சிஐடியு தலைவர் அ. சவுந்தரராஜன் விமர்சித்துள்ளார்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சாம்சங் நிறுவனத்தின் பணியாற்றும் தொழிலாளர்கள் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக சாம்சங் நிறுவனத்தில் இருந்து 500 மீட்டர் தொலைவில் சுங்காசத்திரம் அருகே பெரிய திடல் அமைத்து தொழிலாளர்கள் அமர்ந்து போராடி வருகின்றனர். நேற்று இரவு போராட்டத்தில் ஈடுபட்ட நிர்வாகிகள் பலரை அவர்களது வீடுகளுக்கே சென்று போலீசார் கைது செய்தனர். இதற்கிடையில் போராட்டத்திற்காக அமைக்கப்பட்டிருந்த பந்தல்கள் இரவோடு இரவாக அகற்றியுள்ளனர். ஆனாலும், தொழிலாளர்கள் அதே இடத்தில் இன்று காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். அவர்களை வலுகட்டாயமாக கைது செய்ய காவல் துறையினர் முயற்சித்து வருகின்றனர்.
இந்த நிலையில், சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம் நடத்தும் இடத்துக்கு வந்த சிஐசிடியு மாநிலத் தலைவர் அ. சவுந்தரராஜன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
“இரவோடு இரவாக தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டிருப்பது காவல் துறையின் அத்துமீறலைக் காட்டுகிறது. போராட்டம் நடைபெறும் இந்த இடம் தனியாருக்கு சொந்தமானது. இங்கு வந்து கைது செய்வதற்கு காவல் துறைக்கு எந்த உரிமையும் இல்லை. இந்த போராட்டத்தை சட்டவிரோதமானது என்று சொல்வதே சட்டவிரோதமானது. இவ்வளவு அக்கிரமமாகக் காவல் துறை நடந்து கொள்வது ஆட்சிக்கும் போலீஸ் அமைச்சருக்கு நல்லதல்ல. முதலமைச்சர் உடனடியாக தலையிட வேண்டும்.
காலனிய காலத்தில் காவல் துறை எப்படி செயல்பட்டதோ அதே மாதிரிதான் இப்போதும் காவல் துறை செயல்படுகிறது. கார்ப்பரேட் நிறுவனத்துக்கு ஆதராவக தொழிலாளர்களை அச்சுறுத்த காவல் துறையை பயன்படுத்துகிறார்கள்.
ஒருமாத காலமாக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறோம். கார்ப்பரேட் கம்பெனிக்கு ஆதரவாக அரசு செயல்படுவது தவறு.
தொழில்துறை அமைச்சர் டி.ஆர். பி ராஜா எங்களுடைய கோரிக்கை என்ன என்பதை புரிந்துகொள்ளவில்லையா அல்லது புரிந்து கொண்ட மாதிரி நடிக்கிறாரா என்று தெரியவில்லை. தொழிற்சங்கத்தை பதிவு செய்ய வேண்டும் என்பது எங்களுடைய உடனடி கோரிக்கை அல்ல; சங்கத்தை பதிவு செய்தால் நாங்கள் போராட்டத்தை கைவிடுவோம் என்று எங்கும் நாங்கள் சொல்லவில்லை. சங்கத்தை பதிவு செய்வது என்பது எப்போது வேண்டுமானாலும் நடக்கும். அதற்கு அமைச்சரின் தயவு தேவையில்லை. அமைச்சர் செய்ய வேண்டியதை செய்யாததால்தான் நாங்கள் நீதிமன்றத்தை நாடியுள்ளோம். நீதிமன்றம் சொல்லும்படி நடந்து கொள்ளலாம் என்று சொல்வதற்கு யார் இவர்? அமைச்சரின் பேச்சு முழுவதும் தவறு. அவர் செய்வது மழுப்பல், மக்களை திசைதிருப்புவது. எங்களின் முதல் கோரிக்கை என்பது சங்கத்தை அவர்கள் ஏற்கவேண்டும் அங்கீகரிக்க வேண்டும். கம்பெனி தொழிற்சங்கத்தை ஒத்துக்கொள்ள வேண்டும். அதை ஒத்துக்கொள்ள வைக்கவில்லை என்றால் எதற்கு அரசு? எதற்கு ஆட்சி? எதற்கு போலீஸ்?
நேற்றிரவு வீடு வீடாக சென்று தொழிலாளர்களை வேட்டையாடியிருக்கிறீர்கள். குடும்பங்களை அச்சுறுத்தியிருக்கிறீர்கள். இதை ஏற்றுக் கொள்ள முடியாது. முதலமைச்சர் உடனடியாக தலையிட்டு சரி செய்ய வேண்டும். இல்லையெனில், இந்த அத்துமீறலுக்கு அரசு பதில் சொல்ல வேண்டும்.
போராட்டம் நடைபெறும் இடத்தின் உரிமையாளர் போராட்டம் நடத்த அனுமதி கொடுத்துவிட்டார்.
இந்த போராட்டத்தில் தீவிரவாதிகள், சமூக விரோதிகள் உள்ளே நுழைந்துவிடுவார்கள் என்று சொல்லிவிட்டு, தொழிலாளர்களை கைது செய்வார்கள், தடியடி நடத்துவார்கள், துப்பாக்கிச்சூடு நடத்துவார்கள். சட்ட ஒழுங்கை கெடுப்பது நிர்வாகமும் அவர்களின் அணுகுமுறையும்தான் என்பது இங்குள்ள சிறு பிள்ளைகளுக்கு கூட தெரியும்.” என்றார்.