சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
சென்னை மாநகராட்சியில் பணிபுரியும் ஒப்பந்த தூய்மைப் பணியாளா்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், மாநகராட்சி தூய்மைப் பணிகளை தனியார் மயமாக்குவதை கைவிட வேண்டும் உள்ளிட்ட 16 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, பல்வேறு கட்ட தொடர் போராட்டங்களில் தூய்மைப் பணியாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
அண்ணா அறிவாலயம், கலைஞர் நினைவகம், ரிப்பன் மாளிகை என ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு இடத்தில் போராட்டம் நடத்தி வரும் அவர்கள் சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள சென்னை மாநகராட்சி ஆணையர் குமரகுருபரன் வீட்டை முற்றுகையிட்டு இன்று(ஜன. 2) போராட்டம் நடத்தினர்.
இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட தூய்மைப் பணியாளர்களை காவல்துறையினர் கைது செய்து அழைத்துச் சென்றனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.