கோவை சிறுவன் வழக்கு - விசாரணை அதிகாரியை மாத்துங்க!

Caste discrimination
சாதிய வன்கொடுமை
Published on: 

பள்ளி மாணவர் அகிலன் சாதிய வன்கொடுமையால் தற்கொலைக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:

"கோவை பீளமேடு கே.கே.நாயுடு அரசு உதவிபெறும் பள்ளியில் பதினொன்றாம் வகுப்பு படித்து வந்த அருந்ததியர் சமூகப் பிரிவு மாணவர் அகிலன், தொடர்ச்சியான சாதிய அவமதிப்பு, துன்புறுத்தல், சமூக ஒடுக்குமுறை காரணமாக 21.10.2026 அன்று தற்கொலை செய்துகொண்ட செய்தி அதிர்ச்சி அளிக்கிறது.

இச்சம்பவம் தொடர்பாக பீளமேடு காவல் நிலையத்தில் குற்ற எண் 446/2026-இல் பாரதிய நியாய சன்ஹிதா பிரிவுகள் 115(2), 108, வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 3(2)(வி) ஆகியவற்றின்கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சாதிய அவமதிப்பு, சமூகப் புறக்கணிப்பு தொடர்பாக அச்சட்டத்தின் பிரிவுகள் 3(1)(ஆர்), 3(1)(எஸ்), 3(1)(இசட், எஸ்) உட்பட்ட பொருந்தக்கூடிய பிரிவுகளையும் சேர்த்து வழக்கை விசாரிக்க வேண்டும்.

தமிழ்நாடு கேலிவதைத் தடுப்புச் சட்டம், 1997-இன் பிரிவுகள் 3, 4 கேலிவதையைத் தடைசெய்து தண்டனை விதிக்கின்றன. புகாரை உடனடியாக விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய கடமையைப் பிரிவு 6(1) விதிக்கிறது. அவ்வாறு செயல்படத் தவறும் கல்வி நிறுவனத் தலைவர் அல்லது நிர்வாகப் பொறுப்பாளர், பிரிவு 7-இன்படி கேலிவதைக்குத் துணைபோனவராகக் கருதப்படுகிறார். பள்ளித் தலைமை, நிர்வாகத்தின் பொறுப்பையும் இச்சட்டத்தின்கீழ் விசாரிக்க வேண்டும்.

தற்போதைய விசாரணை அதிகாரி வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின்கீழ் விரைவாகவும் முறையாகவும் விசாரணை நடத்த வேண்டிய கடமையை நிறைவேற்றவில்லை. அவரை உடனடியாக மாற்றி, வன்கொடுமைத் தடுப்பு விதிகள், 1995-இன் விதி 7(1)-இன்படி, அனுபவமும் திறனும் நேர்மையும் கொண்ட, காவல் துணைக் கண்காணிப்பாளர் பதவிக்குக் குறையாத அதிகாரியை உரிய நியமன ஆணை மூலம் விசாரணை அதிகாரியாக நியமிக்க வேண்டும்.

அகிலனைச் சாதிய வன்கொடுமையால் தற்கொலைக்குத் தள்ளிய ஆசிரியர்கள் உட்பட்டோரை உடனடியாகக் கைது செய்ய வேண்டும். அவர்களது சமூகச் செல்வாக்கால் சாட்சிகள் அச்சுறுத்தப்படுவதைத் தடுக்கவும், பாதிக்கப்பட்ட குடும்பத்தின் பாதுகாப்பையும் நீதியின் மீதான நம்பிக்கையையும் உறுதிசெய்யவும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவு 18கி(1)(பீ)-இன்படி உடனடியாக கைது செய்ய வேண்டும்.

இப்பள்ளியில் கடந்த காலங்களிலும் சாதியப் பாகுபாடும் வன்கொடுமைகளும் நிலவியுள்ளனவா, புகார்கள் மறைக்கப்பட்டுள்ளனவா என்பதைச் சுயாதீனக் குழு மூலம் விசாரிக்க வேண்டும்.

மாணவர்களின் சாதியை நேரடியாகவோ, மறைமுகமாகவோ வகுப்பறையில் குறிப்பிடக்கூடாது; உதவித்தொகை விவரங்களைத் தனிப்பட்ட முறையிலேயே தெரிவிக்க வேண்டும்; மீறும் ஆசிரியர்கள் மீது கடும் ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற நீதிபதி கே. சந்துரு குழுவின் பரிந்துரை 7(பீ)–(டி)-ஐ நடைமுறைப்படுத்த வேண்டும். பள்ளி நல அலுவலர் நியமனம், ரகசியப் புகார் தீர்வு அமைப்பு குறித்த பரிந்துரைகள் 12, 13 ஆகியவற்றை செயல்படுத்த வேண்டும்.

பள்ளிகளிலும், கல்வி நிறுவனங்களிலும் சாதிய ஒடுக்குமுறையை அனுமதிக்க கூடாது. அகிலனின் குடும்பத்திற்கு நீதி கிடைக்கவும், மற்றொரு மாணவர் இத்தகைய கொடுமைக்கு ஆளாகாமல் தடுக்கவும் மேற்கண்ட நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்." என்று மு.வீரபாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

அந்திமழையை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர: Whatsapp

அந்திமழையைத் தொடர: Facebook, Twitter, Youtube, Instagram

logo
Andhimazhai
www.andhimazhai.com